Enter your Email Address to subscribe to our newsletters
நெல்லை, 23 அக்டோபர் (ஹி.ச.)
ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அரசு அதிகாரிகளை காரை ஏற்றிக் கொல்ல முயன்ற வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறைத் தண்டனையை நெல்லை முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் உறுதி செய்தது.
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே வீயன்னூர் கிராமத்தில் அர்ஜுனன் என்பவர் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான சாலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து மதில் சுவர் கட்டியிருந்தார்.
இது வசுமதி என்பவரது வீட்டிற்கு செல்ல இடையூறாக இருந்ததால், அவர் மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, 2008ம் ஆண்டு பிப்.,6ம்தேதி, தக்கலை நெடுஞ்சாலைத் துறை இளநிலை பொறியாளர் சுந்தரம் மற்றும் உதவி கோட்டப் பொறியாளர் அந்தோணி சேவியர், போலீஸ் வின்சென்ட் உள்ளிட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றச் சென்றனர்.
அப்போது அர்ஜுனன் அவரது மனைவி கனீஷ்பாய், அவர்களது மருமகன் ரசல்ராஜ் ஆகியோர் அரசுப் பணியை செய்யவிடாமல் தடுத்து, அதிகாரிகளை அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, அர்ஜுனனின் மகன் செந்தில்குமார் காரை ஓட்டி வந்து அதிகாரிகள் மீது மோதினார். இதில் பொறியாளர் சுந்தரம், அந்தோணி சேவியர் மற்றும் போலீஸ் வின்சென்ட் ஆகியோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து பொறியாளர் சுந்தரம் அளித்த புகாரின் பேரில், திருவட்டார் போலீசார் கொலை முயற்சி, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
வள்ளியூர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், 2023ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் கணவன், மனைவி, மகன், மருமகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி 4 பேரும் நெல்லை முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், போலீஸ் விசாரணையில் சில குறைபாடுகள் இருந்தாலும், காயமடைந்த அரசு அதிகாரிகளே சாட்சிகளாக இருந்து நிகழ்வை உறுதி செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் படித்தவர்களாக இருந்தும், உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து, காரை ஏற்றி கொல்ல முயன்ற செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
இதையடுத்து, 4 பேரின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்த நீதிபதி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / ANANDHAN