Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 23 அக்டோபர் (ஹி.ச.)
திரைப்பட இயக்குனரும், நடிகருமான சீமான், 2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியை தொடங்கினார்.
அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் அவர், 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முதல் அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டு, அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி வருகிறார்.
ஆரம்பத்தில் 1.1 ஆக இருந்த நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம், கடைசியாக நடந்த நாடாளுமன்ற தேர்தலில் (2024) 8.1 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. வரும் சட்டசபை தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவதாக அவர் கூறியிருக்கிறார்.
சீமானின் மேடைப் பேச்சு இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவ்வப்போது மாநாடுகளை நடத்தி வரும் அவர், தற்போது இயற்கை வளங்களையும், வாயில்லா ஜீவராசிகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தி வருகிறார்.
அந்த வகையில், கடந்த ஜூலை மாதம் 10-ந்தேதி மதுரையில் மாடுகள் மாநாட்டினையும், ஆகஸ்டு 30-ந்தேதி திருவள்ளூரில் மரங்களின் மாநாட்டினையும் சீமான் நடத்தினார். அவரது இந்த செயல், இயற்கை மற்றும் விலங்குகள் ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்தது.
தொடர்ந்து மலைகளும், நீர்நிலைகளும் ஆக்கிரமிப்புகளின் பிடியில் அழிக்கப்பட்டுவருவதை தொடர்ந்து, அவைகளை காப்பாற்றும் வகையில் மாநாடுகளை நடத்த திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி திருச்சியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந்தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் மாநாடு நடைபெற உள்ளதாக சீமான் அறிவித்துள்ளார்.
இந்த மாநாடு மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு என்ற தலைப்பில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM