ஆசியான் உச்சி மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்கிறார்
புதுடெல்லி, 23 அக்டோபர் (ஹி.ச.) ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகள் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வரும் அக் 26ம் தேதி முதல் அக் 28ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரேசில் அதிபர் லூல
ஆசியான் உச்சிமாநாட்டில் காணொலி காட்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்


புதுடெல்லி, 23 அக்டோபர் (ஹி.ச.)

ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகள் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வரும் அக் 26ம் தேதி முதல் அக் 28ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

ஆசியான் கூட்டமைப்பில் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர் மற்றும் கம்போடியா ஆகிய 10 உறுப்பு நாடுகள் இடம் பெற்றுள்ளன.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடியும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூட்டங்களில் கலந்து கொள்கிறார் என மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று

(அக் 23) ஆசியான் உச்சிமாநாடு தொடர்பாக பிரதமர் மோடி மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது,

எனது அன்பு நண்பர் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் தொலை பேசியில் பேசினேன். மலேசியாவின் ஆசியான் தலைமைத்துவத்துக்கும், உச்சிமாநாடு வெற்றி பெறவும் வாழ்த்தினேன்.

ஆசியான் கூட்டமைப்பின் மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b