Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 23 அக்டோபர் (ஹி.ச.)
கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள வி.ஜி.எம். மருத்துவமனையில் சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் 'உயர்தனிச் செம்மொழி' எனும் நூல் இன்று வெளியிடப்பட்டது.
இது தமிழின் சிறப்புகளை 30 கோணங்களில் பேசும் ஒரு நூல். இதில் 30 தமிழ் அறிஞர்கள், மருத்துவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் தமிழின் சிறப்பு குறித்து எழுதி உள்ளனர்.
இந்த நூலை ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குனரும், கோவையை சேர்ந்த பிரபல தன்னம்பிக்கை பேச்சாளருமான 'சிந்தனை கவிஞர்' கவிதாசன் முன்னிலையில் வி.ஜி.எம், மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத் வெளியிட்டார்.
அவருடன் வி.ஜி.எம். மருத்துவமனையின் எண்டோஸ்கோபி இயக்குனர்கள் டாக்டர் மதுரா பிரசாத், டாக்டர் வம்சி மூர்த்தி, மருத்துவ இயக்குனர் டாக்டர் சுமன்; பிரபல கல்லீரல் நிபுணர் டாக்டர் மித்ரா பிரசாத்; ராம் ஆக்சிஜென் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வி.ராஜகுமார்; கவிஞர் 'மருதூர்' கோட்டீஸ்வரன், தமிழ் ஆரிய வைஸ்ய மகாசபாவை சேர்ந்த விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நூலை பற்றி கவிதாசன் அவர்கள் பேசுகையில்,
தமிழில் கூறப்பட்டுள்ள அரிய பொக்கிஷங்களை எடுத்து நூலக கொண்டுவந்துள்ளோம். இதை குமரன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. உலகில் செம்மொழிகள் 7 உள்ளன, அதில் தமிழும் ஒன்று. தமிழில் இருந்து பிறந்த மொழிகள் ஏராளம் உண்டு. தமிழ் போல அறத்தை பேசும் மொழி உலகில் வேறு எதுவும் இல்லை. எனவே தமிழின் அழகை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கான ஒரு முயற்சி இந்த நூல் என கூறினார்.
இந்த நூலில் உள்ள 30 கட்டுரைகளில் 'தமிழ் - மருத்துவ மொழி' என்கிற கட்டுரையை டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத் அவர்கள் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
தமிழர்களின் உணவு கலாச்சாரம், மருந்து இல்லாத நிலையில் தமிழர்கள் வாழ்ந்தது ஆகியவை பற்றி இந்த கட்டுரையில் தான் பேசியுள்ளதாக கூறினார். பல அரிய நூல்களில் இருந்து மேற்கோள் காட்டியுள்ளதாகவும் கூறிய அவர், இந்த நூலில் தன்னுடைய கட்டுரை இடம்பெற வாய்ப்பளித்ததற்கு கவிதாசன் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொண்டார்.
Hindusthan Samachar / V.srini Vasan