வீடூர் அணையில் இருந்து விநாடிக்கு 4410 கன அடி தண்ணீர் திறப்பு
விழுப்புரம், 23 அக்டோபர் (ஹி.ச.) வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணை, குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. இதன் காரணமாக விக
Veedur Dam


விழுப்புரம், 23 அக்டோபர் (ஹி.ச.)

வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணை, குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.

இதன் காரணமாக விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் அணையில் தண்ணீர் கிடு,கிடுவென நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. வீடூர் அணையின் முமு கொள்ளளவான 32 அடியில் தற்போது 31 அடிக்கு தண்ணீர் நிரம்பியது.

இதனால் அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வீடூர் அணையில் இருந்து நேற்று விநாடிக்கு 5779 கன அடி தண்ணீர் சங்கராபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளதால் இன்று காலை முதல் ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது அணைக்கு 3196 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ள நிலையில் விநாடிக்கு 4410 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு சங்கராபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. வீடூர் அணையில் இருந்து நேற்று முதல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் சீறி பாய்ந்தோடுகிறது.

இதன் காரணமாக சங்கராபரணி ஆற்றங்ரையோரம் உள்ள விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட பொம்பூர், கணபதிப்பட்டு, ரெட்டிக்குப்பம், ஆண்டிப்பாளையம் உள்ளிட்ட 18 கிராமங்களுக்கும், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சில இடங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN