Enter your Email Address to subscribe to our newsletters
தர்மபுரி, 23 அக்டோபர் (ஹி.ச.)
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ஒகேனக்கல், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதனால் நீர்வரத்து அதிகரிப்பால் மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இந்நிலையில் தமிழக எல்லை பிலிகுண்டுலுவில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 32,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 28,000 கன அடியாக குறைந்தது.
ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தை காவிரி நுழைவிடமான தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு
செய்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகம் உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்கு குளிக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகம், நேற்று முன்தினம் தடை விதித்திருந்தது.
தொடர்ந்து நேற்று பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது. தவிர மெயின் பால்ஸ்க்கு யாரும் செல்லாதபடி,நடைபாதைக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்றைய தினமும் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b