Enter your Email Address to subscribe to our newsletters




கோவை, 24 அக்டோபர் (ஹி.ச.)
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் ரோஜ்கார் மேளா நிகழ்ச்சி நாடு முழுவதும் இன்று நடைபெற்றது.
40 இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடு முழுவதும் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி நியமன ஆணைகளை பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக நேரலையில் இணைந்து சிறப்புரை ஆற்றினார்.
இதன் ஒரு பகுதியாக கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் (தனியார் கல்லூரி) நடைபெற்ற ரோஜ்கார் மேளா நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபத் யசோநாயக் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும்,தபால் துறை, வங்கி துறை, ரயில்வே மற்றும் உள்துறை ஆகிய மத்திய அரசு துறைகளில் வேலை வாய்ப்பு பெற்ற 51 பேர் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணி நியமன ஆணைகளை பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய வானதி சீனிவாசன்,
மக்களுக்கு தேவையான திட்டங்களை ஆட்சியாளர்கள் அறிவித்த போதும் அதனை முழுமையாக மக்களிடம் கொண்டு செல்லும் பணிகளை அரசு அதிகாரிகள் தான் செய்கின்றனர் என்பதை உணர்ந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் பேசுகையில்,
விக்சித் பாரத் எனும் வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான முன்னெடுப்பில் இந்த ரோஜ்கார் மேளா நிகழ்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என குறிப்பிட்டார்.
முன்னதாக, கல்லூரி வளாகத்தில் தாயின் பெயரில் மரக்கன்று நடுதல் எனும் முன்னெடுப்பின் கீழ் மத்திய இணை அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இணைந்து மரக்கன்று நட்டு வைத்தனர்.
மேலும், பணி நியமன அணைகளை பெற்றுக் கொண்ட இளைஞர்கள் செல்ஃபி பாயிண்ட்டுகளில் நின்று புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய இணை அமைச்சர்,
கடந்த மூன்று ஆண்டுகளில் 11 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவின் வளர்ச்சியில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு உள்ளதாக பிரதமர் மோடி உறுதியாக நம்புவதாகவும், அதன் அடிப்படையில் அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதாகவும் குறிப்பிட்டார்.
இதற்காக பிரதமர் மோதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், தொடர்ந்து இளைஞர்களை ஊக்குவிக்கும் இது போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகள் சிறப்பாக தொடரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன்,
டெல்டா மாவட்ட விவசாயிகள் கடுமையான மழையால் பாதிக்கப்பட்டுள்ளதோடு உரிய வகையில் நெல் கொள்முதல் செய்யப்படாததால் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர்.
வழக்கம்போல மாநில அரசு மத்திய அரசின் மீது பழி சுமத்தி உள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் பிற கட்சித் தலைவர்கள் கூறியபோதும் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கான உரிய இழப்பீடு வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Hindusthan Samachar / V.srini Vasan