Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர் , 24 அக்டோபர் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் இயங்கி வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அம்மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் நடப்பாண்டுக்கான கரும்பு அரவை தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது.
சந்திரன் எம்எல்ஏ முன்னிலை வகித்த இவ்விழாவில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இணைப்பதிவாளர் மீனா அருள் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், கரும்பு அரவையை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உள்ள 7 உட்கோட்டங்களில் இருந்து 2,051 விவசாயிகளிடம் இருந்து 7505 ஏக்கர் கரும்பு அரவைக்கு முன் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு 1.55 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்ட நிலையில் நடப்பாண்டு 2 லட்சம் டன் அரவைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரும் மார்ச் மாதம் வரை தொடர்ந்து கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை நடைபெறும். கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிலவி வந்த குறைகளை நிவர்த்தி செய்யப்பட்டு அரவை இலக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கரும்பு மகசூல் பெருக புதிய ரக கரும்பு விதை அறிமுகப்படுத்தப்பட்டு மகசூல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சர்க்கரை ஆலையில் நிரந்தர பணியாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
திமுக ஒன்றிய செயலாளர்கள் கூளூர் எம்.ராஜேந்திரன், சி.என்.சண்முகம், கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக குழு முன்னாள் இயக்குனர்கள் சத்தியமூர்த்தி, ஜெயச்சந்திரன், சர்க்கரை ஆலை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b