Enter your Email Address to subscribe to our newsletters

பெகுசாராய், 24 அக்டோபர் (ஹி.ச.)
பீஹாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.
நவ.14ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இத் தேர்தலில் பா.ஜ., மற்றும் காங்.கூட்டணிகள் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் இன்று
(அக் 24) ஆளும் தேஜ கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தை சமஸ்திபூரில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து பெகுசாராய் என்ற இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது,
பீஹாரில் நடந்த காட்டாட்சியை மாற்றி சிறந்த நிர்வாகமாக மாற்றினோம். தற்போது மாநிலத்தை வளர்ச்சி பெறச்செய்வதற்கான நேரம் வந்துவிட்டது. பீஹார் தேர்தலில் வலிமையான தேஜ கூட்டணிக்கும் லாட்பந்தனுக்கு இடையே போட்டி உள்ளது. ஒரு புறம் அனுபவம் வாய்ந்த தலைவரின் கீழ் எங்களது கூட்டணி உள்ளது. மறுபுறம் மிரட்டலில் ஈடுபடும் பெரிய கூட்டணி உள்ளது.
காட்டாட்சி நடத்தியவர்கள் குடும்பத்துக்காக மட்டுமே கவலைப்பட்டனர். பீஹார் இளைஞர்களின் வாழ்க்கையை அழித்துவிட்டனர்.
கடந்த இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெறாத ஆர்ஜேடி, தற்போது அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை ஆர்ஜேடி ஆணவத்துடன் உலுக்கியது. காங்கிரசை வீழ்த்தியதுடன் இடதுசாரிகளை தொங்கலில் விட்டுள்ளது.
பீஹாரில் இருந்து தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து செல்வதற்கு ஆர்ஜேடி தான் காரணம். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வளர்ச்சி தான் பிரதானம். ஆர்ஜேடியும் காங்கிரசும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாக கூறி ஊழல் செய்கின்றன. ஆர்ஜேடி கட்சி குடும்பத்தில் பெரும்பாலானோர் ஊழல் செய்துள்ளனர். அவர்கள் ஜாமினில் வெளியே வந்துள்ளனர்.
நாட்டின் அதிக ஊழல் செய்த குடும்பத்தின் தலைமையில் காங்கிரஸ் செயல்படுகிறது. இந்த இரண்டு கட்சிகளையும் மக்கள் நம்புவதில்லை. நாட்டில் தொழில்கள் நிறைந்த மாநிலமாக பீஹார் இருந்தது. ஆனால், அதன் பிறகு காட்டாட்சி வந்தது. இந்த இருட்டு சகாப்தத்தில் தொழில்துறைக்கு பூட்டு போடப்பட்டது. முதலீட்டாளர்கள் ஓடிவிட்டனர். அவர்கள் தொழிற்சாலையை மட்டும் பூட்டவில்லை. உங்களின் எதிர்காலத்தையும் பூட்டிவிட்டனர்.காங்கிரஸ், ஆர்ஜேடி பெயரை கேட்டதும் முதலீட்டாளர்கள் பயந்ததை மக்கள் மறக்க மாட்டார்கள். வேலை என்ற பெயரில், ஏழைகளிடம் நிலத்தை பறித்தவர்கள் உங்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த மாட்டார்கள்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சீதாராம் கேசரியின் நினைவு நாள் இன்று. அவருக்கு காங்கிரஸ் தலைவராக இருக்கும் குடும்பத்தினர் ஏற்படுத்திய அவமானத்தை மக்கள் மறக்க மாட்டார்கள். காங்கிரசின் தலைவராக இருந்த போது பீஹாரின் பெருமை மிக்க தலைவராக இருந்தார்.
ஆனால், அவரை கழிவறையில் வைத்து பூட்டியதுடன், தலைவர் பதவியை பறித்துக் கொண்டனர். அத்தகைய மக்கள் உங்கள் குடும்பத்தை பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Hindusthan Samachar / vidya.b