பூந்தமல்லியில் போலீஸ் விசாரணைக்கு சென்று விட்டு திரும்பிய ஆட்டோ டிரைவர் வழியிலேயே மயங்கி விழுந்து உயிரிழப்பு
சென்னை, 25 அக்டோபர் (ஹி.ச.) பூந்தமல்லி உப்புக்கொள்ளை தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் முருகன்(38). ஆட்டோ ஓட்டி வந்த இவருக்கு திருமணமாகி,13 மற்றும் 7 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவரிடம் ரூ.6.40
காவல் நிலையம் பூந்தமல்லி


சென்னை, 25 அக்டோபர் (ஹி.ச.)

பூந்தமல்லி உப்புக்கொள்ளை தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் முருகன்(38). ஆட்டோ ஓட்டி வந்த இவருக்கு திருமணமாகி,13 மற்றும் 7 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர் அதே பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவரிடம் ரூ.6.40 லட்சம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக முருகன் வட்டிப் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சசிகலா அசல் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார்.

முருகன் பணத்தை திருப்பிக் கொடுக்காததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பணத்தை திருப்பிக் கொடுக்காத முருகன் மற்றும் பணத்தை கேட்க சென்ற போது முருகனின் மனைவியின் தம்பி கார்த்தி(30) என்பவர் சசிகலாவை அவதூறாகப் பேசியதாகவும், இருவர் மீதும் சசிகலா பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இருவரையும் பூந்தமல்லி போலீசார் நேற்று விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

இதையடுத்து நேற்று காலை இருவரும் பூந்தமல்லி போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி இருவரிடமும் விசாரணை நடத்தி விட்டு 10 நாட்களுக்குள் வாங்கிய பணத்தில் பாதியை திருப்பித் தர வேண்டும் என்று முருகனிடம் எழுதி வாங்கிக் கொண்டு இரவு 8 மணி அளவில் இருவரையும் காவல் நிலையத்திலிருந்து அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் ஆட்டோவில் வீட்டிற்கு சென்ற போது கரையான்சாவடி அருகே முருகன் திடீரென ஆட்டோவில் மயங்கி சரிந்து விழுந்துள்ளார்.

உடனே பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு முருகனை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் முருகன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் முருகன் உயிரிழந்த தகவல் அறிந்த முருகனின் உறவினர்கள் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.

அங்கு வந்த போலீசாரிடம், முருகனின் சாவுக்கு போலீசார்தான் காரணம் என்று கூறி அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பிரேத பரிசோதனைக்காக முருகனின் சடலத்தை போலீசார் எடுத்துச் செல்ல முயன்ற போது அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து சடலத்தை தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போலீசாருக்கும் இறந்தவரின் உறவினர்களுக்குமிடையே மருத்துவமனையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு போலீசார் பேச்சுவார்த்தை சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து முருகனின் உறவினர்கள் கூறும் போது, சசிகலாவிடம் முருகன் கடன் வாங்கி தெரிந்தவர்களுக்கு கொடுத்துள்ளார். அவர்கள் பணத்தை திருப்பித் தராததால் முருகனால் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியவில்லை.

கடந்த 17 மாதங்களாக வட்டிப் பணம் கொடுத்து வந்துள்ளார். சில மாதங்களாக வட்டியும் கொடுக்க முடியாததால் சசிகலா பூந்தமல்லி போலீசில் புகார் செய்துள்ளார்.

இதையடுத்து போலீசாரின் விசாரணைக்காக முருகனும், அவரது மைத்துனர் கார்த்தியும் நேற்று காலை காவல் நிலையத்துக்கு சென்றுள்ளனர்.

மாலையில் இன்ஸ்பெக்டர் வந்து விசாரித்து விட்டு, 10 நாட்களுக்குள் பணத்தை கொடுக்க வேண்டும். இல்லை என்றால் வழக்குப் பதிவு செய்து ஜெயிலில் போட்டு விடுவேன் என்று கூறியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இருவரையும் இரவு திருப்பி அனுப்பி உள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த முருகன் ஆட்டோவில் வரும் வழியில் திடீரென மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்.

போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு மன உளைச்சல் ஏற்படுத்தியதால் அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறும் போது, பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் இருவரையும் காவல்நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்து விட்டு அனுப்பி விட்டோம் என்று தெரிவித்தனர்.

Hindusthan Samachar / Durai.J