Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 அக்டோபர் (ஹி.ச.)
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று
(அக் 25) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
வங்கக்கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல் (montha cyclone) சென்னையை நோக்கி வருவதாக முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அது ஆந்திராவை நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் ஒரு பகுதியாக, சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இம்முறை வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் என எச்சரித்துள்ளதால் அதற்கேற்ப ஏற்பாடுகளை செய்துள்ளோம். அதோடு, முதல்வர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார். கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் விரைந்து கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளோம்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.16-ம் தேதி தொடங்கியது. அக்.25 வரை பெய்த மழையால் 31 பேர் உயிரிழந்துள்ளனர். 47 பேர் காயமடைந்துள்ளனர். 485 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. மாவட்டங்கள்தோறும் நிவாரண முகாம்களை தயாராக வைக்க ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெல் பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்புப் பணி தொடங்கியுள்ளது. இப்பணிகள் முடிந்தவுடன் நிவாரணம் வழங்கப்படும். கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தியுள்ளோம்.
நீர்வளத்துறை, வருவாய்த்துறை இணைந்து ஏரிகளின் நீர்மட்டத்தை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழையால் பாதிப்பு ஏற்படாத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b