தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
சென்னை, 25 அக்டோபர் (ஹி.ச.) தமிழகத்தில் இன்று (அக் 25) கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும், கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்க
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்


சென்னை, 25 அக்டோபர் (ஹி.ச.)

தமிழகத்தில் இன்று

(அக் 25) கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும், கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

இது மேற்கு,வடமேற்கு திசையில் மெதுவாகநகர்ந்து, இன்று (அக்.25) தென்கிழக்கு, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

நாளை (அக்.26) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 27-ம் தேதி காலை தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும் வலுவடையக்கூடும். புதிய புயலுக்கு ‘மோன்தா' (Montha) என பெயரிடப்பட உள்ளது.

அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வடக்கு, வட கிழக்கு திசையில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளை கடந்து செல்லக்கூடும். இதன் காரணமாக, இன்று முதல் 27-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 28 முதல் 30-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும், நாளை விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.

27-ம் தேதி திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 28-ம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழக, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் 15 செ.மீ., திருநெல்வேலி நாலுமுக்கில் 12 செ.மீ., ஊத்துபகுதியில் 11 செ.மீ., ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 10 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் பாலமோர், பேச்சிப்பாறை, சென்னை மேடவாக்கத்தில் 9 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சியில் 8 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு, திருத்தணி, கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை, புத்தன் அணையில் 7 செ.மீ. மழை பதிவாகிஉள்ளது.

Hindusthan Samachar / vidya.b