Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 அக்டோபர் (ஹி.ச.)
2025-26ம் கல்வியாண்டிற்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இறுதி கட்ட மாணவர் சேர்க்கை அடுத்த வாரம் நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் 7,717 தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களைச் சேர்க்க விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், எல்.கே.ஜி வகுப்பிற்கு 81,927 மாணவர்களும், ஒன்றாம் வகுப்பிற்கு 89 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, வரும் 30ம் தேதி, விண்ணப்பங்களின் எண்ணிக்கை இட ஒதுக்கீட்டை விட குறைவாக உள்ள பள்ளிகளில் தகுதியான மாணவர்கள் நேரடியாகச் சேர்க்கப்படுவார்கள். விண்ணப்பங்கள் அதிகமாக உள்ள பள்ளிகளில், வரும் 31ம் தேதி பெற்றோர்கள் முன்னிலையில் வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு செய்யப்பட்ட அனைத்து மாணவர்களின் விவரங்களும் கல்வி மேலாண்மை தகவல் முறைமை (எமிஸ்) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
மேலும், மாநில அதிகாரிகள் இது குறித்து கூறுகையில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தகுதி பெறும் மாணவர்களிடம் இருந்து எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றும், ஏற்கனவே வசூலிக்கப்பட்ட தொகை ஏழு வேலை நாட்களுக்குள் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த நடைமுறைகளைக் கண்காணிக்க மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / vidya.b