Enter your Email Address to subscribe to our newsletters

பாட்னா, 25 அக்டோபர் (ஹி.ச.)
பிஹார் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ககாரியா நகரில் இன்று
(அக் 25) நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா உரையாற்றினார்.
பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது,
சாத் என்ற மாபெரும் திருவிழா இன்று தொடங்கி இருக்கிறது. நமது தாய்மார்களும் சகோதரிகளும் சாத் பூஜையை தொடங்கி இருக்கின்றனர்.
பிஹார், காட்டாட்சியில் இருந்து விலகி இருக்கவும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு வலுவாக இருக்கவும், நமது சகோதரிகள் மற்றும் மகள்கள் பாதுகாப்பாக இருக்கவும், எதிர்காலத்தில் பிஹார் வளர்ந்த மாநிலமாக மாறவும் சாத் தேவியை நான் பிரார்த்திக்கிறேன்.
இந்த தேர்தல், எம்எல்ஏ அல்லது அமைச்சர் அல்லது முதல்வரை தேர்ந்தெடுப்பது பற்றியது அல்ல. இந்த தேர்தல் காட்டாட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டுமா அல்லது வளர்ச்சிக்கான ஆட்சியை கொண்டு வர வேண்டுமா என்பது பற்றியது. லாலு பிரசாத் - ராப்ரி தேவி தலைமையிலான ஆட்சியில், காட்டாட்சி மட்டுமே நடக்கும். அதேநேரத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்தால், பிஹார் வளர்ச்சி பெற்று அதன் புகழ் நாடு முழுவதும் பரவும்.
லாலுவின் ஆட்சியில் கொலை, கொள்ளை, பணம் பறித்தல், கடத்தல் ஆகியவை அன்றாட நிகழ்வுகளாக இருந்தன. அவர்களின் ஆட்சியில், தொழிற்சாலைகள் பிஹாரில் இருந்து வெளியேறின. இதனால், பிஹார் பின்தங்கியது.
அதேநேரத்தில், நிதிஷ் குமார் தலைமையின் கீழ் தேசிய ஜனநாயகக் கூட்டணி பிஹாரை காட்டாட்சியில் இருந்து விடுவித்தது. குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் சலுகைகளை அளிக்கும் நடைமுறைக்கு முடிவு கட்டப்பட்டது. மிக முக்கியமாக, பிஹாரை நக்ஸலிசத்தில் இருந்து விடுவித்தது.
பிஹாரின் மகன்களையும் மகள்களையும் முன்னேற்ற நிதிஷ் குமார் விரும்புகிறார். அதேநேரத்தில், லாலு பிரசாத் யாதவ் தனது மகனை முதல்வராக்கவும் சோனியா காந்தி தனது மகனை பிரதமராக்கவும் விரும்புகின்றனர். நரேந்திர மோடி, நிதிஷ் குமார் ஆகிய இருவரால் மட்டுமே பிஹாரின் மகன்கள் மற்றும் மகள்களின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த முடியும்.
இன்று வரை பிரதமர் மோடி மீதோ முதல்வர் நிதிஷ் குமார் மீதோ ஒரு பைசா கூட ஊழல் குற்றச்சாட்டு இல்லை. ஆனால், லாலு பிரசாத் யாதவ் மீது கால்நடை தீவன ஊழல், வெள்ள நிவாரண ஊழல், BPSC ஊழல் உட்பட பல்வேறு ஊழல் வழக்குகள் உள்ளன.
என்டிஏ அரசு சமீபத்தில், ‘ஜீவிகா தீதி’ திட்டத்தின் கீழ் ஒரு கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.10,000 டெபாசிட் செய்தது. விதவை ஓய்வூதியமும் மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியமும் ரூ.400-ல் இருந்து ரூ.1,100 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. ஆஷா ஊழியர்களுக்கான கவுரவ ஊதியம் ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல ஏராளமான வளர்ச்சிப் பணிகளை நிதிஷ் குமார் அரசு செய்துள்ளது. தற்போது பாட்னாவில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பிரதமர் மோடி நமது நாட்டின் பொருளாதாரத்தை 11-வது இடத்தில் இருந்து 4-வது இடத்துக்கு கொண்டு வந்துள்ளார். 2027-க்குள் நாம் 3-வது பொருளாதாரமாக முன்னேறுவோம். நாட்டின் பாதுகாப்பை பிரதமர் மோடி பலப்படுத்தி உள்ளார். பயங்கரவாதிகளை அவர்களின் இடத்துக்கே சென்று நமது ராணுவம் தாக்குகிறது.
ஊடுருவல்காரர்கள் பிஹாரில் தொடர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக ராகுல் காந்தி பேரணிகளை நடத்துகிறார். நான் அவருக்கு ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், நீங்கள் எவ்வளவுதான் முயன்றாலும் ஊடுருவல்காரர்களை உங்களால் காப்பாற்ற முடியாது. பிஹார் மக்கள் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆட்சியில் அமர்த்துவார்கள். நாட்டில் இருந்து ஒவ்வொரு ஊடுருவல்காரர்களையும் வெளியேற்றும் வேலையை எங்கள் அரசு செய்யும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b