Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 25 அக்டோபர் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் அக். 28 முதல் 30ம் தேதி வரை முத்துராமலிங்கத் தேவரின் 63வது குருபூஜை விழா மற்றும் 118வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது.
2014ம் ஆண்டு பசும்பொன் நினைவிடத்தில் உள்ள தேவரின் சிலைக்கு 13.5 கிலோ எடையுள்ள தங்கக்கவசம் அதிமுக சார்பில் அணிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவின்போது அக். 25 முதல் 31 வரை, இந்த கவசம் அணிவிக்கப்பட்டு பின்னர் மதுரையில் உள்ள வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வரும் 28ம் தேதி யாகசாலை பூஜையுடன் ஆன்மிக விழா தொடங்குகிறது. 29ம் தேதி அரசியல் விழா, அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதியிலிருந்து பொதுமக்கள் பால்குடம், முளைப்பாரி, அலகு குத்தி வருதல், ஜோதி எடுத்தல், முடிகாணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். அக். 30ம் தேதி அரசு விழா நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு தங்கக் கவசம், மதுரை வங்கிப் பெட்டகத்திலிருந்து கொண்டு வரப்பட்டு அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தேவர் நினைவாலய அறங்காவலர் காந்தி மீனாள் நடராஜன் முன்னிலையில்
தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 03 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வருகிற 30-ந் தேதி நடைபெறவுள்ள தேவர் குருபூஜையில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சீமான், செல்வப்பெருந்தகை, வைகோ,ஜி.கே.வாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்று தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b