Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 25 அக்டோபர் (ஹி.ச)
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் இருந்து 42 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆம்னி பேருந்து ஒன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு நேற்று முன் தினம் (23.10.2025) இரவு புறப்பட்டது.
அதன்படி இந்த பேருந்து நேற்று (24.10.2025) அதிகாலை ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அருகே சென்று கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனம் ஒன்று பேருந்து மீது மோதியது.
இதனால் பேருந்தின் இன்ஜின் பகுதியில் இருந்து திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அச்சமயத்தில் பேருந்து வேகமாகச் சென்று கொண்டிருந்த நிலையில் தீயானது பேருந்து முழுவதும் வேகமாக திடீரென்று பரவியது. இதனால் பேருந்து முழுவதுமாக பற்றி எரியத் துவங்கியது. இந்த விபத்தில் 20 பேர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தீ விபத்தில் உயிரிழந்த 20 பேரில் திருப்பூரைச் சேர்ந்த ஒரு இளைஞரும் ஒருவர் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் தள்ளு வண்டியில் வெங்காய வியாபாரம் செய்து வரும் லட்சுமி என்பவரது இளைய மகன் யுவன் சங்கர் ராஜா
(வயது 22). இவர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவ ஆய்வகத்தில் பணி புரிந்து வந்தார்.
இவர் தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை கிடைக்காத சூழ்நிலையில் தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பெற்றோரைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டு ஆம்னி பேருந்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டு உறக்கத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த யுவன் சங்கர் ராஜாவின் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது.
Hindusthan Samachar / vidya.b