அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி வீதியுலா வரும் வாகனங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி தொடக்கம்
திருவண்ணாமலை, 25 அக்டோபர் (ஹி.ச.) நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் உலகப் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றான திருக்கார்த்திகை தீபத்
Tiruvannamalai Temple


திருவண்ணாமலை, 25 அக்டோபர் (ஹி.ச.)

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் உலகப் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றான திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் நவம்பர் 24 ஆம் தேதி கோவிலின் அண்ணாமலையார் சன்னதி முன்பு 63 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் கோலகளமாக தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

பத்தாவது நாளான டிசம்பர் 03 ஆம் தேதி அதிகாலை கோவிலின் கருவறை முன்பு 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை கோவிலின் பின்புறம் அமைந்துள்ள 2668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

இந்நிலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ள கடந்த செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் வெகு விமர்சையாக நடைபெற்றது, அன்று முதல் கோவிலில் பூர்வாங்க பணிகளுக்கான அனைத்து வேலைகளும் வெகு சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில் 10 நாட்கள் காலையும் மாலையும் வீதி உலா வர உள்ள வாகனங்களை பழுது பார்க்கும் பணியில் கோவில் ஊழியர்கள் ஒப்பந்த ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா உற்சவமான நவம்பர் 24 ஆம் தேதி காலை முதல் டிசம்பர் 03 ஆம் தேதி இரவு வரை சாமி மற்றும் அம்பாள் வீதியுலா வரும் வாகனங்கள் அனைத்தும் 1000 கால் மண்டபம் அருகே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது, தற்போது இந்திர விமானம், பூத வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் முழுமையாக சீரமைக்கப்பட்டு தற்போது பல்வேறு வண்ணங்களில் வர்ணம் தீட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர், மேலும் 7 ஆம் நாள் திருவிழா அன்று நான்கு மாட வீதியில் வலம் வரும் பஞ்சமூர்த்திகள் தேர்களில் பொருத்தப்படும் குதிரைகளுக்கும் வர்ணம் தீட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

ஏழாவது நாள் திருவிழாவின் போது விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனடியாக உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் நான்கு மாட வீதிகளில் உலா வர உள்ள நிலையில் பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து செல்லகூடிய சங்கிலிகளுக்கும் வர்ணம் தீட்டும் பணி நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / ANANDHAN