Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 25 அக்டோபர் (ஹி.ச.)
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையின் வாயிலாக பழைய ஆயக்கட்டில் அரியாபுரம், பள்ளிவிளங்கால், பெரியணை, வடக்கலூர், காரப்பட்டி ஆகிய 5 பகுதிகளில் பாசனம் நடைபெறுகிறது.
பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் வழங்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.
அதன்படி 2-ம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இரு போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. கடந்த மே மாதம் 16-ந் தேதி முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 15-ந் தேதி தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. தற்போது 2-ம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்று 2-ம் போக பாசனத்திற்கு அடுத்த ஆண்டு(2026) ஏப்ரல் மாதம் 15-ந்தேதி வரை ஆழியாறு அணையில் இருந்து தொடர்ந்து 173 நாட்களுக்கு 1,143 மில்லியன் கன அடிக்கு மிகாமல் அணையின் நீர்இருப்பு மற்றும் நீர்வரத்தினை பொறுத்து தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறந்து விட அரசு அனுமதி அளித்து உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Hindusthan Samachar / vidya.b