Enter your Email Address to subscribe to our newsletters

ராஞ்சி, 26 அக்டோபர் (ஹி.ச.)
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில், சாய்பாசாவில் உள்ள அரசு மருத்துவமனையில், ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடு கொண்ட ஏழு வயது குழந்தை உட்பட ஐந்து குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாய்பாசா சதார் மருத்துவமனை ரத்த வங்கியில் தாலசீமியா எனும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து பெறப்பட்ட ரத்தம் ஏற்றப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியபோது இந்த விஷயம் முதலில் வெளிச்சத்துக்கு வந்தது.
தற்போது 5 குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு மருத்துவமனையின் அலட்சியம் தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து ராஞ்சியைச் சேர்ந்த உயர்மட்ட மருத்துவக் குழு உடனடியாக விசாரணை நடத்தத் தொடங்கியது. புகாரைத் தொடர்ந்து, குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜார்க்கண்ட் அரசு சுகாதார சேவைகள் இயக்குநர் டாக்டர் தினேஷ் குமார் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழுவை அனுப்பியது.
இச்சம்பவம் குறித்த விசாரணையின் போது, ரத்த வங்கியில் சில முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. மேலும் அவற்றைத் தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று டாக்டர் தினேஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறினார். இப்போதைக்கு, மருத்துவமனையின் ரத்த வங்கி செயல்பாடு, அவசர சிகிச்சை பயன்பாட்டிற்கு மட்டும் செயல்பட்டு வருகிறது.
மரபணு ரீதியான ரத்த கோளாறால் பாதிக்கப்பட்டு ரத்தம் ஏற்றப்பட்ட 5 குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் இப்போது ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்றத்தை எட்டிய நிலையில்,மாநில சுகாதார துறையிடம் நீதிமன்றம் அறிக்கை கோரியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b