Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 அக்டோபர் (ஹி.ச.)
சென்னை பாரிமுனையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உயர் நீதிமன்ற வளாகத்தில் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரி இயங்கி வந்தது.
இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி இரு பிரிவு மாணவர்களுக்கு இடையே கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மோதல் சம்பவம் தமிழகம் முழுவதும் அப்போது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
இதையடுத்து சட்ட மாணவர்கள் மோதல் சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
நீதிபதி சண்முகம் தலைமையிலான ஆணையம், தற்போது உள்ள இடத்தில் சட்ட கல்லூரியை மூடிவிட்டு புதிய இடத்திற்கு கல்லூரியை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று கடந்த 2009ம் ஆண்டு தமிழக அரசுக்கு அறிக்கை கொடுத்தது.
அந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு 118 கோடி ரூபாய் செலவில் திருவள்ளூர் மாவட்டம், பட்டரை பெரும்புதூர் கிராமத்தில் ஒரு சட்டக் கல்லூரியும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புதுப்பாக்கம் கிராமத்தில் மற்றொரு சட்டக் கல்லூரியும் கட்டியுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி முதல் புதிய இடத்தில் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரிகள் செயல்பட தொடங்கின.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இடநெருக்கடி அதிகரித்து வந்த காரணத்தாலும் புதிய நீதிமன்றங்களின் தேவை ஏற்பட்டதாலும் சட்டக் கல்லூரி செயல்பட்டு வந்த புராதன கட்டிடத்தில் உயர் நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிமன்ற அறைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
கடந்த 133 ஆண்டுகள் பழமையான சட்டக் கல்லூரியை பழமை மாறாமல் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு 23 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்டது. புனரமைப்பு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று உயர் நீதிமன்றத்திற்காக இங்கு புதிதாக 6 நீதிமன்ற அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்கவிழா இன்று(அக் 26) நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் புராதன கூடுதல் நீதிமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன், மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எம்.எஸ்.ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
புதிதாக தொடங்கவுள்ள புராதன கூடுதல் நீதிமன்ற கட்டிட நீதிமன்ற அறைகளில் குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கங்கள் செயல்படும் என்று தெரிகிறது.
Hindusthan Samachar / vidya.b