Enter your Email Address to subscribe to our newsletters

புதுடில்லி, 26 அக்டோபர் (ஹி.ச.)
அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கத் துறையில் ஆராய்ச்சியாளர்கள், வல்லுநர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் தலைசிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் தேசிய அறிவியல் விருதுகளை மத்திய அரசு கடந்த ஆண்டு முதல் வழங்கி வருகிறது.
அந்த வகையில், நடப்பாண்டிற்கான விஞ்ஞான் ஸ்ரீ விருது பெறுவோரின் பெயர்களை மத்திய அரசு வெளியிட்டது.
அறிவியல் தொழில்நுட்பத்துறையில் வாழ்நாள் சாதனைகள் படைத்தோருக்கு வழங்கப்படும், 'விஞ்ஞான் ரத்னா' விருது, சமீபத்தில் மறைந்த வான் இயற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் நார்லிகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது, அவரது குடும்பத்தினரிடம் அளிக்கப்பட உள்ளது.
இதேபோல், 'விஞ்ஞான் ஸ்ரீ ' பிரிவின் கீழ் தமிழகத்தின் உயிரி அறிவியல் பிரிவு விஞ்ஞானி தங்கராஜ் உட்பட எட்டு பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தவிர இளம் விஞ்ஞானிகளின் திறனை ஊக்குவிக்கும் வகையில், 'விஞ்ஞான் யுவ' விருதுக்கு சென்னை ஐ.ஐ.டி.,யின் இணை பேராசிரியாக உள்ள மோகனசங்கர் சிவப்பிரகாசம் உட்பட, 14 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அறிவியல் துறையில் குழுவாக செயல்பட்டு சிறந்து பங்களிப்பை அளிக்கும் அமைப்புக்கு, 'விஞ்ஞான் குழு' விருது வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டுக்கான இந்த விருது, ஜம்மு - காஷ்மீரில் லாவெண்டர் மிஷனை முன்னெடுத்த அரோமா மிஷன் குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM