நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் தஞ்சாவூரில் இன்று ஆய்வு
தஞ்சாவூர் , 26 அக்டோபர் (ஹி.ச.) தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரித்து ஈரப்பதத்தை ஆய்வு செய்ய, மத்திய அரசு தலா 3 அதிகாரிகளைக் கொண்ட 3 குழுக்கள் அமைத்துள்ளன. அதன்படி, இரண்டாவது குழுவில் இடம்பெற்றுள்ள இந்திய தானிய சேமிப
நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் தஞ்சாவூரில் இன்று ஆய்வு


தஞ்சாவூர் , 26 அக்டோபர் (ஹி.ச.)

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரித்து ஈரப்பதத்தை ஆய்வு செய்ய, மத்திய அரசு தலா 3 அதிகாரிகளைக் கொண்ட 3 குழுக்கள் அமைத்துள்ளன.

அதன்படி, இரண்டாவது குழுவில் இடம்பெற்றுள்ள இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர் பி.கே.சிங், தொழில்நுட்ப அலுவலர்கள் ஷோபித் சிவாச், ராகேஷ் பரலா ஆகியோர், தஞ்சாவூர் அருகே ஆலக்குடியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் ஈரப்பதம் தொடர்பாக இன்று (அக் 26) ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கிருந்த நெல் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்து சென்றனர். ஆய்வுக்கு வந்த குழுவினரிடம் விவசாயிகள், ‘ஒவ்வொரு ஆண்டும் குறுவை, சம்பா அறுவடையின் போது ஈரப்பதம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே ஒவ்வொரு ஆண்டும் மத்திய குழு வருகை தந்து ஆய்வு செய்கிறது. இந்த செயல் விவசாயிகளுக்கு கண்துடைப்பாகவே உள்ளது. எனவே இப்போது ஆய்வுக்கு வந்துள்ள குழுவினர் உடனடியாக அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பித்து அறிவிப்பு வெளியிட வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆய்வின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மேலாண் இயக்குனர் அண்ணாதுரை, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்ந்து இன்று தஞ்சாவூர் மாவட்டம் ராராமுத்திரகோட்டை, தெலுங்கன் குடிக்காடு, கீழ கோயில் பத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.

Hindusthan Samachar / vidya.b