Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 26 அக்டோபர் (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், குண்டடம் அருகே நிகழ்ந்த கொடூரச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குண்டடம் அடுத்துள்ள பெரியகுமாரபாளையம், செட்டிகாரதோட்டத்தைச் சேர்ந்தவர் பச்சியப்பகவுண்டர், இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருடைய மனைவி மயிலாத்தாள் (80), தனது மகன் கோவிந்தராஜுவுடன் அதே பகுதியில் வசித்து வந்தார்.
மயிலாத்தாள் வீட்டில் உள்ள கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அவருடைய பேரன் விஜயகுமார் (40), குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. திடீரென கோபமடைந்த அவர், தானே கொண்டு வந்திருந்த அரிவாளால் மயிலாத்தாளின் கழுத்தை அறுத்து, தலையை பிரித்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
கொடூரச் செயலை நிகழ்த்திய பிறகு, விஜயகுமார் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
பின்னர், சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், குண்டடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மயிலாத்தாளின் உடலை கைப்பற்றி, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பின்னர், அதே பகுதியிலேயே பதுங்கியிருந்த விஜயகுமாரை போலீசார் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரம்பக் கட்ட விசாரணையில், குடிபோதையில் ஏற்பட்ட தகராறே இந்த கொடூரக் கொலைக்கு காரணமாக இருந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம், தாராபுரம் மற்றும் குண்டடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN