Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 26 அக்டோபர் (ஹி.ச.)
தமிழகத்தில் நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்ய 3 மத்தியக்குழுக்களை மத்திய உணவுத்துறை அனுப்பி உள்ளது.
காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு குழு 2 நாட்களாக ஆய்வுப் பணிகளை தொடங்கி நடத்தி வருகிறது.
அதன்படி திருச்சி, புதுக்கோட்டை, தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்ய மத்திய உணவு துறை துணை இயக்குநர் ராஜ்கிஷோர் சஹி (ஆர்.கே.சஹி) தலைமையிலான குழுவினர் இன்று(அக் 26) திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் வாளாடி திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.
ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளிடம் விவசாயிகள், மழையால் அறுவடைப் பணிகள் தாமதமாகி வருகிறது. அறுவடை செய்த நெல்லை காய வைக்க முடியவில்லை. எனவே நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஆய்வுக்குழுவினர் விவசாயிகளின் நெல் மாதிரிகள், கொள்முதல் நெல் மாதிரிகளை சேகரித்தனர். கருவிகள் கொண்டு நெல்லின் ஈரப்பதத்தை பரிசோதித்தனர்.
தொடர்ந்து நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்தில் குழுவினர் ஆய்வு செய்தபோது, அங்கு போதிய இடவசதி இல்லை. கொள்முதல் நிலையத்தில் ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளனர்.
இதனால் நெல் அளவிடும் பணிகள் தாமதமாவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து ஆய்வுக் குழுவினர் பூவாளூர், கோமகுடி, கொப்பாவளி ஆகிய திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆய்வின்போது, லால்குடி வருவாய் கோட்டாட்சியர் ஸ்ரீதர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக திருச்சி மண்டல மேலாளர் குமரவேல், வட்டாட்சியர் ஞானாமிர்தம் ஆகியோர் உடனிருந்தனர்.
Hindusthan Samachar / vidya.b