Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு, 26 அக்டோபர் (ஹி.ச.)
சபரிமலை அய்யப்பன் கோவிலில் உள்ள துவார பாலகர் சிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கம் காணாமல் போனது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.
இந்த சம்பவத்தில் இடைத்தரகராக செயல்பட்ட பெங்களூருவை சேர்ந்த அர்ச்சகர் உண்ணிகிருஷ்ணன் போற்றி கடந்த 15-ந் தேதி கைது செய்யப்பட்டார்.
அவரை காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையில், சபரிமலையில் இருந்து எடுத்து செல்லப்பட்ட துவார பாலகர் சிலை தங்க கவசத்தை சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர் அங்கு வைத்து அந்த தங்க கவசத்தில் இருந்து 476 கிராம் தங்கத்தை எடுத்துள்ளனர். அதனை கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் டவுனில் நகைக்கடை நடத்தி வரும் தங்க வியாபாரியான கோவர்தன் என்பவரிடம் விற்பனை செய்ததாக உண்ணி கிருஷ்ணன் போற்றி தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தங்க வியாபாரி கோவர்தனை அழைத்து சிறப்பு அதிகாரி பி.சசிதரன் விசாரணை நடத்தினார்.
அப்போது சபரிமலையில் இருந்து திருடிய தங்கத்தை அவரிடம் விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படும் 476 கிராம் தங்கத்தை மீட்க சிறப்பு புலனாய்வு குழுவினர் உண்ணி கிருஷ்ணன் போற்றியை அழைத்துக் கொண்டு பெங்களூருவுக்கு வந்தனர்.
மேலும் பல்லாரி மாவட்டத்திற்கு சென்று கோவர்தன் நகைக்கடையில் சோதனை நடத்தினர். அங்கு நடத்திய தீவிர விசாரணையில் தங்க வியாபாரியான கோவர்தனின் நகைகடையில் இருந்து 476 கிராம் தங்க கட்டியை மீட்டதாக சிறப்பு புலனாய்வு குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
அதே நேரத்தில் சபரிமலையில் அபகரிக்கப்பட்ட தங்கத்தை வாங்கியதற்காக கோவர்தன் கடைக்கும் அதிகாரிகள் சீல் வைத்து மூடி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் நேற்று நகைக்கடை திறக்கப்படாமல் இருந்தது.
இதற்கிடையே பெங்களூரு ஸ்ரீராமபுரம் அருகே சவுடேஸ்வரி அம்மன் கோவிலையொட்டி இருக்கும் அர்ச்சகர் உண்ணிகிருஷ்ணன் போற்றிக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
அவரது வீட்டில் இருந்த தங்க கட்டிகள் மற்றும் ரூ.2 லட்சம் அதிகாரிகளுக்கு சிக்கியதாக தெரியவந்துள்ளது.
மேலும் உண்ணி கிருஷ்ணன் போற்றி வீட்டில் இருந்து மேலும் சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM