Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 26 அக்டோபர் (ஹி.ச.)
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27ம் தேதி நடைபெற்ற த.வெ.க பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அக். 3, 4ம் தேதிகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தவெக நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.
அக். 6, 7ம் தேதிகளில் தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் உயிரிழந்தவர்கள் குடும்பங்களை நேரில் சந்தித்து வீடியோ கால் மூலம் விஜயை அவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க வைத்தார்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண தொகை வழங்க அக். 13, அக். 17ம் தேதிகளில் விஜய் கரூர் வர திட்டமிட்ட நிலையில், நேரில் வர இயலாததால் அக். 18ம் தேதி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வங்கி கணக்கில் தலா ரூ.20 லட்சம் வீதம் பணம் வரவு வைக்கப்பட்டது.
இதையடுத்து நாளை
(அக். 27ம் தேதி) சென்னை மகாபலிபுரத்தில் விஜய், அவர்களை சந்திக்கிறார். இதற்காக கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களை சேர்ந்தவர்களை அழைத்து செல்வதற்காக 5 பேருந்துகள் தயார் செய்யப்பட்டது.
கரூரில் உள்ள 27 குடும்பங்களை சேர்ந்தவர்களில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சென்னை செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதனால் அவரவர் வசதிக்கேற்ப வருவதற்காக பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதற்காக ஏமூர்புதூர் பகுதியில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த பகுதிக்கு இன்று (அக்.26ம் தேதி) காலை 9.30 மணிக்கு கார், மினி வேனுடன் வந்த தவெக நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உயிரிந்தவர்களின் குடும்பத்தினர்களை அவ்வாகனங்களில் அழைத்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.
இவர்கள் கரூர் வெண்ணெய்மலையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு பேருந்துகளில் அமர வைக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து இன்று பகல் 12 மணிக்கு முன்னதாக 5 சொகுசு பேருந்துகளும் கரூரில் இருந்து புறப்பட்டன.
இந்த பேருந்துகளில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் செல்வதாக தவெக தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b