Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 அக்டோபர் (ஹி.ச.)
தமிழக காங்கிரசில் கடந்த சில மாதங்களாக கூட்டணியில் கூடுதல் சீட்டு கேட்க வேண்டும், ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என்ற கோஷம் எழுந்து வருகிறது.
இது தொடர்பாக ஏற்கனவே சென்னைக்கு மேலிட பார்வையாளர் வந்திருந்தபோது சில எம்.எல்.ஏ.க்களும், நிர்வாகிகளும் கோரிக்கை வைத்தனர். நிர்வாகிகளின் கருத்தை கேட்ட மேலிட பார்வையாளர், கூட்டணி விவகாரங்கள் பற்றி பொது வெளியில் கருத்து சொல்ல வேண்டாம்; அது பற்றி டெல்லி மேலிடம் முடிவு செய்யும் என்று கூறினார்.
இந்த சூழலில், தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் சுமார் 88 பேர் கலந்து கொள்கிறார்கள். மேலிட பார்வையாளர் கிரீஷ் சோடங்கரும் கலந்து கொள்கிறார். ஏற்கனவே காங்கிரஸ் விஜய்யுடன் கூட்டணி அமைக்கும், தற்போதைய கூட்டணி மாறும் என்றெல்லாம் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்தச் சூழலில், இன்று நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் கூட்டணி பற்றி தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என்றும், தொடர்ந்து எந்த கூட்டணியில் இடம் பெற்றாலும் கூடுதல் சீட்டு கேட்க வேண்டும், ஆட்சியில் பங்கும் கேட்க வேண்டும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்ற வலியுறுத்த இருப்பதாக கூறப்படுகிறது.
இது பற்றி காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:
செயற்குழு கூட்டத்தில் வருகிற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி முக்கியமாக விவாதிக்கப்படும். மேலும் 77 கட்சி மாவட்டங்களுக்கும் புதிய மாவட்ட தலைவர்களை வருகிற டிசம்பர் மாதத்துக்குள் நியமிக்க டெல்லி தலைமை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நேரடியாக ஆய்வு செய்ய விரைவில் குழுவும் வர இருக்கிறது. இது பற்றியும் விவாதிக்கப்படும்.
மேலும் வருகிற ஜனவரி மாதத்தில் இருந்து ராகுல் காந்தி தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள வரவுள்ளார். தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த 4 மண்டலங்களிலும் ராகுல் காந்தி பிரசாரம் செய்ய வருவார். ஏற்கனவே பீகாரில் காங்கிரஸ் மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்தது.
தமிழ்நாட்டிலும் தேர்தல் நெருங்கி வரும் போது பேச்சு வார்த்தையில் ஏற்படும் நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக இப்போதே அது தொடர்பாக தெளிவான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Hindusthan Samachar / JANAKI RAM