Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 26 அக்டோபர் (ஹி.ச.)
கடந்த 2011-ம் ஆண்டு பா.ஜனதாவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தமிழ்நாட்டில் ரத யாத்திரை சென்றபோது மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டி பாலத்தின் அடியில் பைப் வெடிகுண்டு வைத்து அவரை கொல்ல முயற்சி நடைபெற்றது.
இதுதொடர்பாக முகமது ஹனீபா என்ற தென்காசி ஹனீபா உள்ளிட்டோர் மீது திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தென்காசி ஹனீபாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.
வத்தலக்குண்டு அருகே பதுங்கி இருந்த தென்காசி ஹனீபாவை போலீசார் பிடிக்க முயன்றபோது அவர் போலீசாரை கத்தியால் குத்திவிட்டு தப்பிக்க முயன்றதாக வத்தலக்குண்டு போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் கைதான அவரிடம் இருந்து வெடி பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கொலை முயற்சி வழக்கை விசாரித்த திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றம், தென்காசி ஹனீபாவை இந்த வழக்கில் இருந்து விடுவித்தது.
இதை எதிர்த்து கோவை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில், மதுரை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் கூறியதாவது,
இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் ஆதாரப்பூர்வமாக உள்ளன. சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து கைப்பற்றியவை உண்மையான வெடிபொருட்கள்தான் என்று வெடிமருந்து ஆணையமும் உறுதிப்படுத்தி உள்ளது.
எனவே இந்த வழக்கில் ஹனீபாவை விடுவித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தென்காசி ஹனீபா குற்றவாளி என இந்த நீதிமன்றம் முடிவு செய்கிறது. எனவே அவருக்கான தண்டனை விவரம் வருகிற 28-ந்தேதி (நாளை மறுநாள்) தெரிவிக்கப்படும். அன்றைய தினம் அவர் இந்த நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b