Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 26 அக்டோபர் (ஹி.ச.)
கோவை சுங்கம் பகுதியில் இந்திய கட்டிடக்கலை வல்லுனர்கள் குழுமம் சார்பில் கட்டிடக்கலை கண்காட்சி நடைபெற்றது.
அதில்,பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பார்வையிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்பது பிரதமர் மோடியின் சிந்தனையில் உருவான அற்புதமான திட்டம் என்றும் இந்தியாவிலேயே அதிகமான ஸ்மார்ட் சிட்டிகள் பெற்ற மாநிலம் தமிழ்நாடு அதிலும் கோவையில் ஏழு குளங்கள் சீரமைத்து மேம்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது என குறிப்பிட்டார்.
வருகிற 28ஆம் தேதி துணை குடியரசு தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் கோவைக்கு வருகை தர உள்ளதை முன்னிட்டு அனைத்து விதமான ஏற்பாடுகளையும் பாஜக மற்றும் தனியார் அமைப்பு செய்து வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழக அரசின் தனியார் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா குறித்தான கேள்விக்கு,
பல்கலைக்கழக நிலப்பரப்பை குறைத்து தான் அந்த சட்ட மசோதாவை கொண்டு வந்தார்கள் என்றும், தேசிய கல்விக் கொள்கையை ஒரு புறம் எதிர்க்கிறார்கள் ஆனால் தேசிய கல்விக் கொள்கையில் இருக்கக்கூடிய பல்வேறு விஷயங்களை எடுத்து புதிதாக கல்வி கொள்கை திட்டத்தில் செயல்படுத்துகிறோம் என்று திராவிட மாடல் அரசு கூறுவதாக சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாடு கல்வியில் சிறந்தது என்று மாநாடு நடத்துகிறார்கள் ஆனால் அதேசமயம் பல்வேறு பள்ளிக்கூடங்கள் மூடப்படுகிறது, சமூக நீதி பேசுகின்ற திராவிட மாடல் அரசாங்கத்தில் சமூக நீதி விடுதிகள் மூடப்பட்டு வருவதுதான் அவர்களது சாதனை என்றும் விமர்சித்தார்.
ஒரு மசோதாவை கொண்டு வருவதற்கு முன்பு அனைவரிடமும் கலந்துரையாடி அதனை கொண்டு வர வேண்டும் அவசரகதியில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்துவதும் அதன் பிறகு கூட்டணி கட்சிகள் எல்லாம் கூறியதை அடுத்து அதனை வாபஸ் பெறுவதுமாக டிராமா அரசை நடத்த வேண்டாம் என கூறிய அவரிடம் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைமை கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் மாமல்லபுரத்திற்கு அழைக்கப்பட்டுள்ளது குறித்து சீமான் தெரிவித்த கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பவே,
இந்த விவகாரத்தில் மற்றவர்கள் கூறிய கருத்துக்குள்ளே செல்ல விரும்பவில்லை ஆனால் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் குறைந்தபட்சம் மக்களை பார்க்கிறார் என்பதே நல்ல விஷயம் தான் என்றார்.
சிபிஐ விசாரணை முடிந்து உண்மை வெளிவரும் பொழுது நீதி கிடைப்பதற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
நெல் கொள்முதல் குறித்தான கேள்விக்கு மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதால் விவசாயிகள் கடும் துயரத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் டெல்டா காரர் என்று முதல்வர் கூறி வரும் நிலையில் டெல்டா விவசாயிகள் அதற்கு பதில் அளிக்க 2026 ஆம் ஆண்டிற்காக காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
செம்பரம்பாக்கம் ஏரி நீரை தன்னிடம் சொல்லாமல் திறந்துவிட்டார்கள் என காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளது குறித்த கேள்விக்கு,
அவர் சட்டமன்ற குழு தலைவர், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்,அவர் வெளிப்படையாக சொல்கிறார்.
தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எனக்கு சொல்லவில்லை என்று, நான் தொட்டால் அந்த தண்ணியை திறக்கக்கூடாதா என்றும் சொல்கிறார் எனவும் இவர்கள் பேசும் சமூக நீதிக்கும் இவர்கள் கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் மாநில தலைவராக இருக்கும் நபருக்கு இந்த அளவிற்கு மன வருத்தத்தை உருவாக்க முடியும் என்றால் இவர்கள் பேசும் சமூக நீதி எங்கே இருக்கிறது எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும் PM SRI திட்டத்தில் தமிழ்நாடு கூடிய விரைவில் இணையும், கேரள மாநிலம் இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் வந்து விடக்கூடாது என்று ஏற்றுக் கொண்டுள்ள சூழலில் தமிழக அரசும் இதனை ஏற்றுக் கொள்கின்ற காலம் நிச்சயம் வரும் எனவும் கல்வியில் அரசியலை கலக்க வேண்டாம் யதார்த்தத்தை புரிந்து கொண்டு அந்தத் திட்டத்தில் இணைய வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை எனவும் வலியுறுத்தினார்.
இதேபோல் தேர்தல் ஆணையத்தின் SIR திட்டத்துக்கு யார் யாரெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும் என்றும் அது 18 வயது ஆனவர்களை கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, ஒரு வாக்காளரின் பெயர் பல்வேறு தொகுதிகளில் இருந்தால் அதனை சரி பார்த்து நீக்க வேண்டும் இறந்தவர்களின் பெயரை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் யார் அந்த தொகுதியின் வாக்காளர்களோ அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதுதான் தேர்தல் ஆணையத்தின் நோக்கம் என்ற ஆனால் எதிர்ப்பவர்கள் வேண்டுமென்றே வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்குகிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.
வாக்காளர்கள் தற்பொழுது செல்போன் மூலமாகவே அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறினார்.
தொடர்ந்து அண்மைக்காலமாக பாஜக தலைவர்கள் தவெக வை எந்த வகையிலும் விமர்சிப்பதில்லையே கூட்டணிக்காகவா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த வானதி சீனிவாசன்,
விமர்சனங்கள் செய்வதால் ஒவ்வொரு கட்சியும் கூட்டணிக்கு வருவதில்லை என்று கூறினால் தற்பொழுது எந்த கட்சியும் கூட்டணிக்கு வராது என்றும், செந்தில் பாலாஜியை பற்றி முதல்வர் திருடர் என கூறினார் தற்பொழுது செந்தில் பாலாஜி திமுக கட்சியில் இணைந்த பிறகு தியாகி என குறிப்பிடுகிறார் என நகைப்புடன் கூறினார்.
அரசியலில் மாறி மாறி பேசுவதை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்ற கேள்விக்கு,
அது வருத்தமாக தான் உள்ளது என்றும் அவ்வாறு பேச வேண்டிய சூழல் இருப்பதாகவும் பதிலளித்தார்.
தமிழக வெற்றி கழகத்தை பாஜக முடக்கி வைத்துள்ளது என பரவலாக விமர்சானங்கள் வருகிறதே என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பவே,
அது அபாண்டமான குற்றச்சாட்டு என்றும் நாட்டில் அனைத்து கட்சிகளும் சுதந்திரமாக செயல்படலாம் எனவும் தெரிவித்தார்.
Hindusthan Samachar / V.srini Vasan