Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 அக்டோபர் (ஹி.ச.)
இந்திய ஐடி நிறுவனமான ஜோஹோ, மென்பொருள் துறையில் ஏற்கனவே ஒரு ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இப்போது டிஜிட்டல் கட்டணத் துறையிலும் நுழைகிறது.
Google Pay மற்றும் PhonePe போன்ற முக்கிய நிறுவனங்களுடன் போட்டியிட, Zoho விரைவில் Zoho Pay என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Zoho Pay மூலம் இந்தியாவின் நுகர்வோர் கட்டணச் சந்தையில் நுழைய Zoho தயாராகி வருகிறது,
தொடக்கத்தில், Zoho Pay செயலி ஒரு தனித்த செயலியாக இருக்காது. இது Zohoவின் செய்தியிடல் செயலியான அரட்டை செயலியில் ஒருங்கிணைக்கப்படும். அதாவது ஒருவர் அரட்டை செயலியில் சேட் செய்யும்போது வேறு செயலிக்கு மாறாமல் பணத்தை அனுப்பலாம் அல்லது பெறலாம். இது சிறு வணிகங்கள் மற்றும் சாதாரண மக்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
Zoho Payments Tech இன் தலைமை நிர்வாக அதிகாரி சிவராமகிருஷ்ணன் ஈஸ்வரன் நிறுவனத்தின் குறிக்கோள் எளிதான, பாதுகாப்பான மற்றும் தடையற்ற பரிவர்த்தனைகளை வழங்குவது என விளக்கியுள்ளார்.
அரட்டை செயலியுடன் இதை ஒருங்கிணைப்பது அரட்டை சாளரத்தை விட்டு வெளியேறாமல் தடையற்ற பரிவர்த்தனைகளை செய்ய உதவும்.
Zoho ஏற்கனவே வணிக கட்டணங்கள் மற்றும் பாயிண்ட் ஆஃப் சேல்ஸ் தீர்வுகளை வழங்குவதாகவும், இப்போது, இந்த பகுதியில் ஆழமாக ஆராய விரும்புவதாகவும் சிவராமகிருஷ்ணன் ஈஸ்வரன் கூறினார். ஃபிண்டெக் அணுகுமுறை படிப்படியாக விரிவடையும் என்றும், பணம் செலுத்துதல்களில் தொடங்கி கடன் வழங்குதல், தரகு, காப்பீடு மற்றும் வெல்த்டெக் என விரிவடையும் என்று ஈஸ்வரன் தெரிவித்தார்.
Zoho Pay உடன் கூடுதலாக, Zoho Billing எனப்படும் புதிய விலைப்பட்டியல் மற்றும் சந்தா மேலாண்மை கருவியும் வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Zoho வங்கிகளுடன் பே ரோலை இணைத்து வருகிறது. இதனால் பணம் வசூலிப்பதில் இருந்து பணப்புழக்க மேலாண்மை மற்றும் தானியங்கி ஊதியம் வரை அனைத்தும் ஒரே இடத்தில் இருக்கும். சிறு வணிகங்கள் மற்றும் நுகர்வோர் என இரு தரப்பினரும் பணியாற்ற இணைக்கப்பட்ட நிதி அமைப்பை உருவாக்குவதே இதன் குறிக்கோள்.
Zoho Pay இன்னும் சில மாதங்களில் அறிமுகம் ஆகும் என கூறப்படுகின்றது. அரட்டை செயலி 2021 இல் தொடங்கப்பட்டது. இது நம் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சேட்டிங் தளமாகும். இது தரவு தனியுரிமையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
Zoho Pay ஐ இதனுடன் ஒருங்கிணைப்பது இதன் ஒரு முக்கிய மேம்படுத்தலாக பார்க்கப்படுகின்றது. அரட்டை செயலி நுகர்வோர் மற்றும் சிறு வணிகங்களை இணைக்கும் ஒரு ஃப்ரண்ட் எண்ட் தளம் என்றும், சேட்டிங்கிலேயே பண பரிமாற்றம் செய்ய முடிந்தால், அது பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் என்றும் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Zoho Pay தற்போது இண்டர்னல் டெஸ்டிங் கட்டத்தில் உள்ளது. இதை அடுத்த சில மாதங்களில் கட்டம் கட்டமாக அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் அரட்டை செயலி வழியாகவும் பின்னர் ஒரு சுயாதீன செயலியாகவும் இது அறிமுகம் செய்யப்படும்.
Zoho எப்போதும் தனி நபர் மற்றும் நிறுவன பயனர்களுக்கு ஏற்ற தயாரிப்புகளை உருவாக்குகிறது என்று ஈஸ்வரன் கூறினார். Zoho Pay நிதி சேவைகளுக்கும் இந்தக் கொள்கையைப் பயன்படுத்துகிறது.
இந்தியாவில் டிஜிட்டல் கட்டணச் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. கூகிள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இருப்பினும், ஜோஹோவின் வருகை ஒரு புதிய திருப்பத்தைக் கொண்டுவரும். குறிப்பாக, அரட்டையின் கட்டண அம்சம் சிறு வணிகங்கள் பில்களை எளிதாக செலுத்த உதவும். தனியுரிமைக்கு முக்கியத்துவம் கொடுப்பது பயனர் நம்பிக்கையை அதிகரிக்கும்.
ஜோஹோ ஏற்கனவே வணிக கருவிகளை வழங்கி வருகிறது. இப்போது, பேமெண்ட்ஸ் அம்சத்தை சேர்ப்பது முழுமையான தொகுப்பை வழங்கும். ஒட்டுமொத்தமாக, ஜோஹோ பே கட்டணங்களை எளிதாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும் என்றும் நம்பப்படுகின்றது.
Hindusthan Samachar / JANAKI RAM