Enter your Email Address to subscribe to our newsletters

ராஞ்சி, 27 அக்டோபர் (ஹி.ச.)
ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங். கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள பலமாவ் புலிகள் காப்பகத்தில், காட்டெருமைகளின் எண்ணிக்கை குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.
அதன்படி, 33 பெண், 25 ஆண் காட்டெருமைகள் உள்ளன.
இதைத் தவிர, 4 வயதுக்கு உட்பட்ட 10 குட்டிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, சிப்பாதோஹர் மற்றும் பெட்லா பகுதிகளில் உள்ளன.
வேட்டையாடுதல், நோய்த்தொற்று, உள்ளூர் கால்நடைகளால் அவற்றின் வாழ்விடங்களில் ஏற்படும் இடையூறுகளால், ஜார்க்கண்டில் காட்டெருமைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக வனவிலங்கு நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து, பலமாவ் புலிகள் காப்பகத்தின் இயக்குநர் எஸ்.ஆர்.நடேஷ் கூறியுள்ளதாவது:
காப்பகத்தில், 226 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் காட்டெருமைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இது அவற்றின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. காட்டெருமைகளின் இனப்பெருக்கத் திறனும் குறைந்துள்ளது. இதை மேம்படுத்த, மற்ற மாநிலங்களில் இருந்து காட்டெருமைகளை கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம்.
அந்த வகையில், மத்திய பிரதேசத்தில் இருந்து 50 பெண் காட்டெருமைகளை கொண்டு வர அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளோம்.
அனுமதி கிடைத்ததும், காட்டெருமைகள் கொண்டு வரப்பட்டு, காப்பகத்தின் மையப் பகுதிகளில் விடப்படும்.
அந்த பகுதியில் புலிகள் நடமாட்டம் தற்போது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / JANAKI RAM