Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 27 அக்டோபர் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டத்தில் 6 மாதம் முதல் 6 வயது வரை குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் இன்று (அக் 27) முதல் துவங்க உள்ளது.
இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக குழந்தைகளுக்கு தேசிய வைட்டமின் ஏ சத்துக் குறைபாடு நோய்களை தடுக்கும் திட்டத்தின் கீழ் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நமது மாவட்டத்தில் இன்று (27.10.2025) முதல் 1.11.2025 வரை நடைபெற உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 6 மாதம் முதல் 6 வயது வரை சுமார் 1 லட்சத்து 7 ஆயிரத்து 537 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட உள்ளது.
வைட்டமின் ஏ சத்து 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் உடல், மன வளர்ச்சி மற்றும் புத்தி கூர்மைக்கு மிகவும் இன்றியமையாத நுண்சத்து ஆகும். மேலும் வைட்டமின் ஏ சத்து, கண் குருடு ஏற்படாமல் தடுக்க மிகவும் அவசியமான ஒன்றாகும். குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க வைட்டமின் ஏ நுண்சத்து உதவுகிறது.
வைட்டமின் ஏ திரவம் வழங்குவதனால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது இந்த திரவம் அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் 6 முதல் 11 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மில்லி அளவும், 12 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 2 மில்லி அளவும் வழங்கப்பட உள்ளது. பொது மக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் கொடுத்து பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b