Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 அக்டோபர் (ஹி.ச.)
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி சனிக்கிழமை அன்று இரவு 7 மணி அளவில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் இந்தக் கோரச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
இதனைத் தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பிலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.
அதே போல், கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி, ஐஜி அஸ்ரா வாகனம் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டது. ஆனால் தவெக தரப்பில் கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட விபத்தில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐகோர்ட்டு அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவை ரத்து செய்யக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இதனை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு, வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. அது மட்டும் இன்றி ஐகோர்ட்டு அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த சிபிஐ அதிகாரிகள், கரூர் மாவட்ட காவல்துறையிடமிருந்து கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கோப்புகளைப் பெற்றுக் கொண்டு விசாரணையைத் தொடங்கினர்.
இந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் தரப்பிலிருந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதனுடைய நகலைத் தமிழக வெற்றிக்கழகக் கட்சியின் தரப்பு வழக்கறிஞருக்கு நகல் வழங்கப்பட்டது.
அதில் ஏ1 ஆக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகனும். ஏ2 அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் ஏ3 ஆக பொதுச் செயலாளர் நிர்மல் குமார் இணைக்கப்பட்டனர். மேலும் கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் தவெக நிர்வாகிகள் சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்குகள், சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM