Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 அக்டோபர் (ஹி.ச.)
'மாநிலம் முழுதும், 62,750 டன் கொள்ளளவு உடைய, 67 நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசின் அறிக்கையில்,
'விவசாயிகள் பாடுபட்டு உழைத்து உற்பத்தி செய்யும் நெல் மணி ஒன்று கூட வீணாகக்கூடாது' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதன்படி, கொள்முதல் செய்யும் நெல்லை, பாதுகாப்புடன் சேமிக்க, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. முந்தைய அ.தி.மு.க., ஆட்சியை விட, கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
ஊக்கத்தொகை அ.தி.மு.க., ஆட்சியில், மத்திய அரசு நிர்ணயம் செய்த விலையை விட, சன்னரக நெல்லுக்கு குவின்டாலுக்கு 70 ரூபாய், சாதாரண ரக நெல்லுக்கு 50 ரூபாய், ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.
அ.தி.மு.க., ஆட்சியில், 2016 முதல் 2021 வரை, 1.13 கோடி டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. ஆண்டுக்கு சராசரியாக, 22.7 லட்சம் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.
தி.மு.க., அரசு கடந்த நான்கு ஆண்டுகளில், 1.70 கோடி டன் நெல் கொள்முதல் செய்துள்ளது. ஆண்டுக்கு சராரியாக, 42.6 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்துள்ளது.
நடப்பாண்டு செப்டம்பர், 1ம் தேதி முதல் கடந்த, 24ம் தேதி வரை 1,853 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இவற்றின் வாயிலாக, 10.40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதில், 8.77 லட்சம் டன் நெல் மற்ற மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மீதமுள்ள, 1.63 லட்சம் டன், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில், 53,831 டன், தஞ்சாவூரில் 23,125, மயிலாடுதுறையில் 16,793, நாகப்பட்டினத்தில், 21,537 டன் நெல் எடுத்து செல்ல வேண்டியுள்ளது.
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை, 17 சதவீதத்தில் இருந்து, 22 சதவீதமாக அதிகரிக்க, மத்திய அரசுக்கு, கடந்த 19ம் தேதி முதல்வர் கடிதம் எழுதினார்.
நிபுணர் குழு அதைத்தொடர்ந்து, 23ம் தேதி மத்திய அரசு மூன்று நிபுணர் குழுவை நியமித்தது. இக்குழுவினர் தமிழகத்தில் ஆய்வு செய்துள்ளனர்.
நெல் சேமிப்பிற்கு, 1.25 லட்சம் டன் கொள்ளளவு உடைய, 83 கிடங்குகள் அமைக்கும் பணி, 199 கோடி ரூபாயில் துவங்கியது.
இதுவரை, 38,500 டன் கொள்ளளவு உடைய, 16 கிடங்குகள் பயன்பாட்டிற்கு வந்து உள்ளன. மீதமுள்ள, 67 கிடங்குகளை கட்டும் பணி நடந்து வருகிறது.
அ.தி.மு.க., ஆட்சியை போல் இல்லாமல், நெல் கொள்முதலிலும், அவற்றை மாவட்டங்களுக்கு அனுப்புவதிலும், தமிழக அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM