Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 27 அக்டோபர் (ஹி.ச.)
கோவை, சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு இடையே ஏராளமான காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இப்பகுதியில் தற்போது காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், காற்றாலைகள் குறிப்பிட்ட வேகத்தை விட அதிக அளவில் இயங்கி வருகின்றன.
ஆனால், போதிய பராமரிப்பு இல்லாத காற்றாலைகள் காற்றின் வேகத்தைத் தாங்க முடியாமல் அவ்வப்போது தீப்பிடித்து எரிவது வழக்கமாகி வருகிறது.
இந்நிலையில், இன்று காலை பலத்த காற்று வீசிய போது, செலக்கரச்சல் பகுதியில் உள்ள ஒரு காற்றாலை இயந்திரம் வேகத்தின் காரணமாக தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அடிக்கடி காற்றாலைகள் தீப்பிடித்து எரிவதால், இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
காற்றாலைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / V.srini Vasan