Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 27 அக்டோபர் (ஹி.ச.)
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ‘மோந்தா’ புயல் அக்.28-ம் தேதி காலை தீவிரப் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வங்கக்கடலில் கடந்த 24-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற நிலைகளைக் கடந்து, தற்போது புயலாக வலுவடைந்துள்ளது.
இந்தப் புயலுக்கு ‘மோந்தா’ என்ற பெயரை தாய்லாந்து நாடு வழங்கியுள்ளது. ‘மோந்தா’ என்றால் அழகிய, நறுமணம் மிக்க மலர் என்று அர்த்தமாம். நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் ‘மோந்தா’ முதல் புயல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இது தொடர்பாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் இன்று (அக் 27) அதிகாலை வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ‘மோந்தா’ புயல் அக்.28-ம் தேதி காலை தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும். தற்போதைய நிலவரப்படி மணிக்கு 16 கிமீ வேகத்தில் வடமேற்கு திசையில் இந்தப் புயல் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இது மேலும், வடமேற்கு திசையிலேயே நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 28 காலையில் தீவிரப் புயலாக வலுப்பெறும். நாளை மாலை ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரப் புயல் எச்சரிக்கையை ஒட்டி ஆந்திர மாநில அரசு ஸ்ரீகாகுளம், விஜியநகரம் மாவட்டங்களில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மோந்தா புயல் தீவிரமடைந்து ஆந்திராவில் தான் கரையைக் கடக்கும் என்று இப்போதைக்கு கணிக்கப்பட்டிருந்தாலும் கூட, ஒடிசாவின் கிழக்குப் பகுதியில் 15 மாவட்டங்களில் உஷார் நிலைக்கு தயாராகி வருகிறது.
இதில் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b