Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 27 அக்டோபர் (ஹி.ச.)
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கழுகுமலையில், குடைவரைக் கோவிலான கழுகாசலமூர்த்தி கோவில் உள்ளது.
தென்பழனி என அழைக்கப்படும் இக் கோவிலில், கந்தசஷ்டி விழா கடந்த 26ம் தேதி துவங்கியது.
விழாவின் 5-ம் நாளான இன்று சூரபத்மனின் தம்பி தாரகாசூரனை முருக பெருமான் வதம் செய்யும் சம்ஹார நிகழ்ச்சி நடந்தது.
சம்ஹாரத்துக்காக, சுவாமி வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அப்போது, தூது சென்ற வீரபாகுவை சூரர்கள் சிறைபிடித்தனர்.
இதையடுத்து அவரை மீட்க சுவாமி வீரவேல் ஏந்தி மயில் வாகனத்தில் போர்க்களத்தை அடைந்தார்.
அங்கு கோயிலிலிருந்து சுவாமி சார்பில் நாரதர் முருகாற்றுப்படை பாடல்கள் பாடியபடி சூரபத்மனிடம் 3 முறை தூது சென்றார்.
தூது படலத்தில் சமரசம் ஏற்பாடாததை தொடர்ந்து தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
சுவாமி கழுகாசலமூர்த்தி தாரகாசூரனை சம்ஹாரம் செய்தார்.
அப்போது பக்தர்கள் “வெற்றி வேல், வீர வேல்” என கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர், கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
கந்தசஷ்டி விழாவின் 6-வது நாளில் தான் அனைத்து முருகன் கோவில்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கும்.
ஆனால், தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான் 5-வது நாளில், தாரகாசூரன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.
இந் நிகழ்ச்சியில் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
6ம் நாளான நாளை சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. 9-ம் நாளான 30-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் திருக்கோயில் ஊழியர்கள், சீர்பாத தாங்கிகள் செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b