Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 27 அக்டோபர் (ஹி.ச.)
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் புகழ்பெற்ற முருகன் கோவில்களிலும் இன்று (அக் 27) கந்தசஷ்டி விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இதில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹாரம் விழா உலக புகழ் பெற்றது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது .
இந்த ஆண்டு திருவிழா கடந்த 22-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.அன்று முதல் முருகனுக்காக வெளியூர், வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலில் தங்கியிருந்து விரதம் மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக கோவில் வளாகத்தில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டிருந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்றுநடைபெறுவதை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. இன்று காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம் நடைபெற்றது.
மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறவுள்ளது. அதன்பின்னர் மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.
சூரசம்ஹாரத்தை காண்பதற்காக உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகிறார்கள்.
சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை முன்னிட்டு திருச்செந்தூரில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புப்பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.250க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டும், டிரோன் கேமராக்கள் மூலமாகவும் கண்காணிக்கப்படுகிறது. 20 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுக்களும், ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் உள்ளன.
கடலில் நீராடும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக, எட்டு படகுகள் மற்றும் நீச்சல் வீரர்கள் 80 பேர் ஒருங்கிணைப்பட்டுள்ளனர். சூரசம்ஹார நிகழ்வை பக்தர்கள் சிரமமின்றி கண்டுகளிக்கும் வகையில் கடற்கரையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
விழா நடைபெறவுள்ள பகுதியில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தினர்.
Hindusthan Samachar / vidya.b