Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 27 அக்டோபர் (ஹி.ச)
மதுரை உலகத்தமிழ்சங்க கூட்டரங்கில் தமிழ் முழக்கம் மேடைப்பேச்சு - ஆளுமைத்திறன் மேம்பாட்டுப் பயிற்சி பன்னாட்டு பயிலரங்க நிறைவு விழா இன்று
(அக் 27) நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்று உரையாற்றிய தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது,
பேச்சாளர்களுக்கு மத்தியில் உரையாற்றுவது எனக்கு பொருத்தமானதா என்று யோசிக்க வேண்டும்.
பல்வேறு நாடுகளில் சில பல்கலைக்கழகங்களில் நான் படித்திருக்கிறேன். என்றைக்குமே அந்த கல்வி அரங்கங்களில் பேச்சாளராகவோ, விவாத மேடைகளிலோ நான் பங்கேற்றதே கிடையாது. ஆனால் இங்கே மாவட்ட ஆட்சியர் கூறியது போல பேச்சாற்றல் வெறும் பேச்சாற்றலாக மட்டும் இல்லாமல், அதில் கருத்தும் தத்துவங்களும் நிறைந்திருக்க வேண்டும்.
மேலும், இங்கு ஒரு 300 பேர் மத்தியில் மட்டுமே நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்று நினைத்து பேசக்கூடாது. இந்தப் பேச்சு பதிவு செய்யப்பட்டு எப்போது வேண்டுமானாலும் அது மீளாய்வு செய்யப்படலாம் என்ற எண்ணத்தோடு, எதிர்காலத்தை உணர்ந்து பேச வேண்டும்.
என்னை இன்று உலகெங்கிலும் யார் சந்தித்தாலும் முதலில் சொல்லக்கூடிய வார்த்தை “உங்கள் பேச்சை யூடியூப் மூலம் பார்த்தோம்” என்பதே. இதே அரங்கில் நான் பேசிய எத்தனையோ விஷயங்கள் வைரலாகி உள்ளன. எனவே பேச்சாளர்கள் இதனை உணர்ந்து பேச வேண்டும்.
மேலும் தமிழ் இணைய நூலகத்தில் வரலாற்றில் உள்ள அத்தனை பக்கங்களும் நிரம்ப கிடைக்கின்ற நூல்கள் இருக்கின்றன. அதில் இருந்து கடந்த கால நினைவுகளை வரலாறு பற்றிய தரவுகளை எடுத்து பேச்சாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், கோ.தளபதி எம்எல்ஏ., உலகத் தமிழ்ச் சங்க செயலாளர் முனைவர் ந.அருள், உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் முனைவர் இ.சா.பர்வீன் சுல்தானா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b