Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 27 அக்டோபர் (ஹி.ச.)
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த பணியைத் (SIR) தேர்தல் ஆணையம் துவங்கும் தகவல் வந்ததும் அலறும் முதல்வர் முக.ஸ்டாலினுக்கு வரலாற்றை நினைவூட்ட விரும்புகிறேன் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலின் போது, போலி வாக்காளர்கள் இருப்பதாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது மறந்துவிட்டதா?
மறைந்த திரு. ஜவஹர்லால் நேரு அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில் துவங்கி காங்கிரஸ் ஆட்சியில் மொத்தம் 10 முறை வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி (SIR) நடைபெற்றது முதல்வருக்குத் தெரியாததா என்ன? இப்படி ஆண்டாண்டு காலமாக நடக்கும் தேர்தல் ஆணையத்தின் வழக்கமான நடைமுறையை ஏதோ புதிய முறை போல காட்சிப்படுத்த முயற்சிப்பது ஏன்?
மேலும், திருத்தப் பணியில் ஈடுபடப்போகும் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி முதல் மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரிகள் வரை அனைவரும் தமிழக அரசின் கீழ் பணியாற்றுவோர் தான். அப்படி இருக்கையில் தமிழக அரசு அதிகாரிகளை நேர்மையற்றவர்கள் என்று சந்தேகிக்கிறதா திமுக அரசு?
தமிழகத்தில் வங்கதேசத்தினர் ஊடுருவல் அதிகமாகியிருக்கும் வேளையில், அவர்கள் வாக்காளராக உருமாறுவதைத் தடுக்கத் தான் இந்த வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுகிறதே தவிர தமிழக வாக்காளரை நீக்குவதற்கு அல்ல என்பது தங்களுக்கும் தெரியும்.
எனவே மழை வெள்ள பாதிப்புகள் தொடங்கி பயிர் கொள்முதல் செய்யாமை, தரமற்ற சாலைகள், குடிநீர் தட்டுப்பாடு, பள்ளிக்கரணை ஊழல் போன்ற திமுக அரசின் தவறுகளை மறைக்க SIR-ஐ கையில் எடுத்து, பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்.
எவ்வளவு மடை மாற்றினாலும் மக்கள் எதையும் மறக்கவும் போவதில்லை, மனம் மாறப்போவதுமில்லை. திமுகவின் தோல்வி நிச்சயம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ