உதகை நகராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் மீது பல கோடி ரூபாய் ஊழல் புகார்
நீலகிரி, 27 அக்டோபர் (ஹி.ச.) நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில், தி.மு.க. கவுன்சிலர்கள் எண்ணிக்கை 23 ஆக உள்ளது. திமுகவை சேர்ந்த எம்.வாணீஸ்வரி தலைவராகவும், ஜே.ரவிகுமார் துணை தலைவராகவும் உள்ளனர். இந்நிலையில், திமுக தலைவர்
Ooty municipal office


நீலகிரி, 27 அக்டோபர் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில், தி.மு.க. கவுன்சிலர்கள் எண்ணிக்கை 23 ஆக உள்ளது.

திமுகவை சேர்ந்த எம்.வாணீஸ்வரி தலைவராகவும், ஜே.ரவிகுமார் துணை தலைவராகவும் உள்ளனர். இந்நிலையில், திமுக தலைவர் மற்றும் துணை தலைவர் மீது திமுக கவுன்சிலர்களே ஊழல் புகார்களை எழுப்பியுள்ளனர்.

உதகையில் புதிய மார்க்கெட் கட்டுமானத்தில் கமிஷன் பெற்றதாக திமுக கவுன்சிலரே நகரமன்றத்தில் வெளிப்படையாக கூறியதால், துணைதலைவர் மோதலில் ஈடுபட்டார்.

இந்த விவகாரத்தில் அந்த கவுன்சிலர் கட்சியிலிருந்து தற்காலிமாக நீக்கப்ப்டடார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தனி நபருக்காக நில வகை மாற்றம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து தலைமைக்கு புகார் வாசித்து போர்க்கொடி தூக்கியுள்ளனர் திமுக கவுன்சிலர்கள். எஸ்.நாகமணி, அனிதாலட்சுமி, கே.வனிதா, விசாலாட்சி, கே.தம்பி இஸ்மாயில், எம்.சி.ஜார்ஜ், புளோரினா புஷ்பராஜ், கே.ஏ.முஸ்தபா, மேரி புளோரினா மார்டின், பி.கீதா, பிரியாவினோதினி, செல்வராஜ் ஆகியோர் 13 பேர் கட்சி தலைமைக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.

அதில், அவர்கள் கூறியுள்ளதாவது உதகை நகராட்சியில்‌ தலைவர்‌ வாணீஸ்வரி, துணைத்‌தலைவரும், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர்‌ ரவிக்குமார்‌ அதிகாரிகளை பயன்படுத்தி நகராட்சிக்கு பெரும்‌ வருவாய்‌ இழப்பை ஏற்படுத்தி, கட்சியின் வாக்கு வங்கியை இழக்கும்‌ வகையிலும்‌செயல்பட்டு வருகின்றனர்‌.

கடந்த ஜூலை 31ம்‌நாள்‌ நடைபெற்ற நகரமன்ற

கூட்டத்தில்‌ பாலலிங்கையா, அஞ்சன்குமார்‌ ரங்கராஜ்‌ ஆகியோருக்கு சொந்தமான 5.86 ஏக்கர்‌ நிலத்தை மல்டிபர்பஸ்‌ஜோனாக மாற்றுவதற்கு தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டது.

இதற்காக 1 சென்ட்டுக்கு ரூ.1 லட்சம் வீதம்‌ ரூ.5 கோடியே 86 லட்சம்‌பேரம்‌ பேசி நில உரிமையாளர்களிடம்‌ வசூல்‌ செய்துள்ளனர்‌.

உதகை கோரிசோலை செல்லும்‌ வழியில்‌ அங்குள்ள தேயிலை தொழிற்சாலைக்கு அருகே துணைத்‌தலைவருக்கு சொந்தமான லாட்ஜ்‌ உள்ளது.

விதிகள்‌ மீறி கட்டப்பட்ட அந்த லாட்ஜிற்கு அருகில்‌ அங்கிருந்த மரங்களை எந்த அனுமதியும்‌ பெறாமல்‌ வெட்டி கடத்தியும்‌, மக்கள்‌ பயன்பாட்டுக்கான திட்டத்தை தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனது சொந்த லாட்ஜுக்கு தடுப்பு சுவர்‌ எழுப்பியுள்ளார்‌.

உதகையில் புதிய மார்க்கெட் ஒப்பந்ததாரரிடம்‌ மிகப்‌பெரிய தொகையை துணைத்‌தலைவர் பெற்றுள்ளார்‌. மேலும்‌, குதிரைப்‌பந்தய மைதானத்தில்‌ தற்காலிக கடைகள்‌ கட்டப்பட்டதில் பெரும்‌ ஊழல்‌ நடந்துள்ளது.

முன்னாள்‌ மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்து விதிமுறை மீறி கட்டப்பட்ட பல வணிக கடைகளை சீல்‌ வைத்ததை ரவிக்குமார்‌, அதிகாரிகளை சரி செய்து பல லட்சங்களை கையூட்டாக பெற்றுள்ளார்.

எனவே, இவர்கள்‌ மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர். உதகை நகராட்சி தலைவர், துணை தலைவர் மீது திமுக கவுன்சிலர்களே போர்க்கொடி தூக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN