தெருநாய்க்கடி வழக்கு விவகாரத்தில் 25 மாநில தலைமைச் செயலாளர்கள் நவம்பர் 3ம் தேதி நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி, 27 அக்டோபர் (ஹி.ச.) தெரு நாய்க்கடி மற்றும் ரேபிஸ் காரணமாக உயிரிழப்புகள் இந்தியா முழுவதும் அதிகரித்து வருவதாக வெளியான செய்தி அறிக்கையை கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அ
தெருநாய் கடி வழக்கு விவகாரத்தில் 25 மாநில தலைமைச் செயலாளர்கள் நவம்பர் 3ம் தேதி நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு


புதுடெல்லி, 27 அக்டோபர் (ஹி.ச.)

தெரு நாய்க்கடி மற்றும் ரேபிஸ் காரணமாக உயிரிழப்புகள் இந்தியா முழுவதும் அதிகரித்து வருவதாக வெளியான செய்தி அறிக்கையை கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கை விசாரித்த விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு, அனைத்து மாநிலங்களும் பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தது.

இந்த வழக்கு இன்று

(அக் 27) மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்கு வங்கம், தெலங்கானா மற்றும் டில்லி மாநகராட்சி ஆகியவை மட்டுமே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. தமிழகம் உள்ளிட்ட 25 மாநிலங்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை.

இதற்கு நீதிபதிகள் கூறியதாவது:

இது எவ்வளவு தீவிரமான விஷயம் என்று உங்களுக்கு தெரியாதா? தெருநாய் கடி சம்பவம் தொடர்பான செய்திகளை தொடர்ந்து பார்த்து வருகிறோம். கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்த போதிலும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை.

எதற்காக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்பதற்கு பதில் அளிக்க வேண்டும்; சிலர் தங்களுக்கு நோட்டீஸ் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள்.

அவர்கள் செய்திகளை படிப்பதில்லையா? இது தொடர்பாக தமிழகம் உள்பட 25 மாநில தலைமைச் செயலாளர்கள் நவம்பர் 3ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிடனர். மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் 3ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Hindusthan Samachar / vidya.b