Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 27 அக்டோபர் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியில் உள்ள 21 -வது வார்டு பகுதியான சொர்ணபுரம் பள்ளிவாசல் தெருவில் தற்போது நியாய விலை கடை ஒன்று செயல்பட்டு வரும் நிலையில், இந்த நியாய விலை கடையானது முறையாக திறக்கப்படுவதில்லை எனவும், அதன் காரணமாக அப்பகுதியில் வசித்து வரும் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வில்லை எனக்கூறி கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ரேஷன் கடை முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்த நிலையில், இன்றைய தினம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஒன்றிணைந்து சுமார் 1800 ரேஷன் கார்டுகள் இந்த கடையில் உள்ள நிலையில், இந்த ரேஷன் கடையானது முறையாக திறக்கப்படாமல் இருப்பதால் ஏராளமான பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில்லை எனவும், ஆகவே இந்த கடையை இரண்டாக பிரித்து ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கையை குறைத்து அனைத்து மக்களுக்கும் தேவையான அத்தியாவசிய பொருட்களை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவினை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் இது தொடர்பாக உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN