Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 அக்டோபர் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், வருவாய்த் துறை அதிகாரிகள் கடந்த 2022ம் ஆண்டு முதலே பல்வேறு வணிக நிறுவனங்களை இடித்து, அரசு நிலத்தை மீட்கும் நடவடிக்கைகளைத் தொடங்கினார்கள்.
குறிப்பாக பரங்கிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், குறிப்பாக பல்லாவரம் கண்டோன்மென்ட் பகுதிகளில், இது போன்ற நடவடிக்கைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுமார் 15 ஏக்கர் மதிப்பிலான அரசு நிலம் கடந்த காலங்களில் மீட்கப்பட்டன. இந்த நிலத்தின் மதிப்பு பல கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று
(அக் 28) காலையிலேயே ஆலந்தூர் பகுதியில் சுமார் 300 கோடி மதிப்புள்ள அரசு நிலம் அதிரடியாக மீட்கப்பட்டுள்ளது.
சென்னை ஆலந்தூர் பகுதியில் குத்தகைக் காலம் முடிந்தும் வணிக ரீதியாக செயல்பட்டு வந்த கட்டடத்தை மீட்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், நிலத்தை அரசு கையகப்படுத்தலாம் என தீர்ப்பு வந்தது.
இதையடுத்து இன்று காலை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அடுத்து கட்டடத்தில் செயல்பட்ட சரவணபவன் ஹோட்டல் ஊழியர்களை வெளியேற்றிய அதிகாரிகள், ஹோட்டலின் பெயர்ப் பலகையை அகற்றி கட்டடத்திற்கு சீல் வைத்தனர்.
இந்த சம்பவத்தால் ஆலந்தூரில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
Hindusthan Samachar / vidya.b