மோந்தா புயல் எச்சரிக்கை - 3 துறைமுகங்களில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
சென்னை, 28 அக்டோபர் (ஹி.ச.) வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயலாக உருமாறியுள்ளது. மோந்தா என பெயரிடப்பட்டு உள்ள இந்த புயல் இன்று காலை 5.30 மணி நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கே 600 கிலோ மீட்டர்
மோந்தா புயல் எச்சரிக்கை - 3 துறைமுகங்களில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


சென்னை, 28 அக்டோபர் (ஹி.ச.)

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயலாக உருமாறியுள்ளது.

மோந்தா என பெயரிடப்பட்டு உள்ள இந்த புயல் இன்று காலை 5.30 மணி நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கே 600 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது.

இது வங்கக்கடலில் மேற்கு-வடமேற்கு நோக்கி தொடர்ந்து நகர்ந்து, ஆந்திர பிரதேசத்தின் மசிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் பகுதிகளுக்கு இடையே இன்று மாலை அல்லது இரவில் காக்கிநாடா அருகே தீவிர புயலாக கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கடலூர், தூத்துக்குடி உள்பட தமிழக துறைமுகங்கள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகம் என மொத்தம் 9 துறைமுகங்களில் கடந்த 25-ந்தேதி அன்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

மேலும் சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று (அக் 27) ஏற்றப்பட்டது.

இந்த நிலையில், வங்கக்கடலில் நிலவி வரும் மோந்தா தீவிர புயல் காரணமாக சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று (அக் 28) ஏற்றப்பட்டு உள்ளது.

கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 6 துறைமுகங்களில் நேற்று ஏற்றப்பட்ட 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு தொடர்ந்து நீடிக்கிறது.

Hindusthan Samachar / vidya.b