Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 அக்டோபர் (ஹி.ச.)
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (அக் 27) சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட நிலையில் இன்று (28.10.2025) அதிகாலையில் சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் திடீராய்வு மேற்கொண்டார்.
கட்டுப்பாட்டு அறைக்கு 1913 தொலைபேசி மூலமாக வந்த புகார்கள், புகார்களின் விவரங்கள் பதிவேடுகளில் பதியப்பட்டுள்ளதா என்றும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு சமுக வலைதளங்கள் மூலமாக வரப்பெற்ற புகார்களின் எண்ணிக்கை, புகார்களின் விவரங்கள், புகார்தாரர்கள அனுப்பிய புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றையும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், நடவடிக்கை மேற்கொள்ள எடுத்துக் கொண்ட நேரம், சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறித்து புகார்தாரர் தெரிவித்த கருத்துகள் ஆகியவற்றை கணினியில் பார்வையிட்டும், கணினியில் சமூக வலைதள புகார்களை கையாளும் பணியாளர்களிடம் அவர் கலந்துரையாடியும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
புகார்கள் குறித்து சம்மந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த மாநகராட்சி அலுவலர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டுள்ளதா என்றும், அலுவலர்கள் புகாரை சரிசெய்ய எடுத்துக் கொண்ட காலஅளவு குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மழை அதிக அளவில் பெய்கின்றதா என்றும், வெவ்வேறு சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக நடைபெறுகின்றதா என்றும் சுரங்கப்பாதைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஒவ்வொரு சுரங்கப்பாதையாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி முறையில் பணிபுரியும் பணியாளர்களிள் எண்ணிக்கை குறித்தும், பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.
இந்த ஆய்வில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b