Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 அக்டோபர் (ஹி.ச.)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் தீபாவளியை அன்று வெளியான 'பைசன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னை தியாகராய நகரில் தயாரிப்பாளர் கலைபுலி தாணு அலுவலகத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் தயாரிப்பாளர் தாணு ஆகியோரை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ பாராட்டி கௌரவித்தார்..
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துரை வைகோ,
இயக்குநர் அன்புத்தம்பி மாரி செல்வராஜ் அவர்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒருவரின் ஊக்கமளிக்கும் வெற்றிப் படைப்பை 'பைசன்' திரைப்படமாகக் கொடுத்துள்ளார்.
மனிதன் வெற்றி பெற வேண்டும் என்ற எனது நிலைப்பாட்டுக்கு ஏற்ப, இந்தப் படம் சாதிய வன்முறையையும் வறுமையையும் கடந்து கதாநாயகன் வெற்றி பெற்றதைக் காட்டுகிறது. 'பைசன்' படமும், இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
சமுதாயத்தை மேம்படுத்தும் இது போன்ற நல்ல படைப்புகள் இனியும் வரவேண்டும் என்று என் ஆசையைத் தெரிவித்து, படக்குழுவினருக்கு வாழ்த்துகளைக் கூறுகிறேன்.
நான் சாதி, மதம் கடந்து படத்தைப் பார்த்து ரசித்தேன். கிட்டத்தட்ட இரண்டு பக்கங்களுக்கு இப்படத்தைப் பற்றி வைகோ அவர்கள் எழுதியுள்ளார் . நமது சகோதரர் மாரி செல்வராஜின் இந்த அற்புதமான படைப்பிற்காக அவருக்கு 'இயக்குநர் திலகம்' என்ற பட்டத்தை வைகோ அவர்கள் வழங்கியுள்ளார். அவர் கைகளால் எழுதிய இந்த வாழ்த்து மடல் உங்கள் முன்னால் இதோ.
90-களில் தென் மாவட்டங்களில் நடந்த ஒரு பிரச்சினையின் பின்னணியில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. சாதிய வன்மம் மற்றும் வன்முறையின் பின்னணியில், ஒரு இளைஞர் விளையாட்டின் மூலம் வாழ்க்கையில் எப்படி முன்னேறுகிறார் என்பதை இப்படம் தத்ரூபமாகக் காட்டுகிறது.
யாரையும் புண்படுத்தாமல், இரு சமூகங்களிலும் உள்ள நல்லவர்கள் ஒரு நல்ல விஷயத்தை ஆதரிப்பதைப் பதிவு செய்துள்ளது.
இன்றைக்குப் படித்த இளைஞர்கள் மத்தியிலும் சாதிய வன்மம் உள்ளது. காவல்துறையைத் தாண்டி, இந்தச் சாதியப் பிளவுகளால் உருவாகும் பிரச்சனைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஆரம்பிக்க வேண்டும்.
காவல்துறை தங்களுடைய கடமைகளை செய்தாலும் மக்களிடம் அந்த விழிப்புணர்வு சரியாக இருந்தால் பிரச்சனைகள் உருவாகாமல் இருக்கும்.
வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் போது சாதி மதம் இனம் ஏன் அரசியல் இயக்கங்களை கடந்து நல்லவர்களை எப்போது நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்களோ அன்றைக்கு தான் தமிழ்நாட்டில் நல்லது நடக்கும் அதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. என்றார்.
Hindusthan Samachar / P YUVARAJ