Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 28 அக்டோபர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (27) கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி, திருநெல்வேலி மாவட்டம் கேடிசி நகரில் ஆணவக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கேடிசி நகரைச் சேர்ந்த சுர்ஜித் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது.
இதையடுத்து கொலை செய்த சுர்ஜித்தின் தந்தை, சார்பு ஆய்வாளர் சரவணன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீஸ் வசம் ஒப்டைக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் சுர்ஜித் உறவினரான ஜெயபாலன் என்கிற இளைஞரும் சிக்கினார்.
கவின் செல்வகணேஷை கொலை செய்த சுர்ஜித் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள், ரத்தக்கறை படிந்த உடைகளை தனது சித்தி மகன் ஜெயபாலன் வீட்டில் மறைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஜெயபாலன் உடந்தையாக இருந்தது உறுதி செய்யப்பட்டதில், அவரும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கவின் கொலை வழக்கில் சுர்ஜித்தின் தந்தை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சரவணன், நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN