Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 28 அக்டோபர் (ஹி.ச.)
கேரளாவின் வடக்கு மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கோழிக்கோடு பஸ் நிலையம் உட்பட பிரதான இடங்களில் மழைநீர் தேங்கியது.
இதே போல், கடற்கரையை ஒட்டியுள்ள மலப்புரம், கண்ணுார் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
கேரளாவின் மத்திய மாவட்டங்களான எர்ணாகுளம், ஆலப்புழா பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
இதனால், பெரும்பாவூர் அருகே ஆலுவா - மூணாறு இடையே சாலை சேதமடைந்ததால், அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
இதே போல், ஆலப்புழா மாவட்டத்தின் அர்துங்கல் பகுதியைச் சேர்ந்த பால் தேவாசியா என்ற மீனவர், நேற்று அதிகாலை மீன்பிடிக்க சென்றார். அப்போது பலத்த காற்று வீசியதில் படகு கடலில் மூழ்கி அவர் உயிரிழந்தார்.
எர்ணாகுளம் மாவட்டத்தின் மூக்கனுார் பகுதியில் மின்னல் தாக்கி கோஹன் மிஸ்த்ரி, 4 5, என்பவர் பலியானார்.
இதற்கிடையே கேரளாவின் கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணுார், கோட்டயம், பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் அதி கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது.
வயநாடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் ஆலப்புழா மாவட்டங்களுக்கு கனமழைக்கான 'மஞ்சள் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என, வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM