ராஜ ராஜ சோழனின் சதய விழா அக் 31-ஆம் தேதி தொடக்கம் - முன்னேற்பாடுகள் தீவிரம்
தஞ்சாவூர், 28 அக்டோபர் (ஹி.ச.) உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் பிறந்த நாள் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று சதயவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்ப
அக் 31 ஆம் தேதி தொடங்கும் ராஜராஜசோழனின் சதய விழா முன்னேற்பாடுகள் தீவிரம்


தஞ்சாவூர், 28 அக்டோபர் (ஹி.ச.)

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் பிறந்த நாள் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று சதயவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டிற்கான சதய விழா வருகிற 31ம் தேதி (வெள்ளிக்கிழமை) தஞ்சை பெரியகோவிலில் தொடங்குகிறது. விழாவின் முக்கியநிகழ்வாக 1ம் தேதி (சனிக்கிழமை) தஞ்சை பெரியகோவில் அருகே பூங்காவில் உள்ள மாமன்னர் ராஜராஜசோழன் சிலைக்கு அரசு தரப்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.

அதைத்தொடர்ந்து பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் ராஜராஜசோழன் சிலைக்கு ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.

இதனை முன்னிட்டு ராஜராஜசோழன் சிலை தூய்மை பணிகள் மற்றும் சிலைக்கு மாலை அணிவிப்பதற்கு வசதியாக மேடை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

பூங்கா வளாகத்தை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புற்களை வெட்டி அப்புறப்படுத்தி பூங்கா வளாகத்தில் கிடந்த குப்பைகளை பணியாளர்கள் சுத்தம் செய்து வருகின்றனர்.

மேலும் பூங்கா வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / vidya.b